கேஜ்ரிவால், சிசோடியா மற்றும் சிலர்… ஆம் ஆத்மியின் ‘5 ஸ்டார்’ தோல்விப் பட்டியல்!

புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஆம் ஆத்மியில் அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்பட 5 முக்கியத் தலைவர்கள் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளனர். அவர்கள் குறித்து பார்ப்போம்.

அரவிந்த் கேஜ்ரிவால்: முன்னாள் அரசு ஊழியரான அரவிந்த் கேஜ்ரிவால், அன்னா ஹசாரே டெல்லியில் நடத்திய ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து, அப்போதைய ஐக்கிய முற்போக்கு அரசின் எதிரான இயக்கத்தின் மூலம் அரசியலுக்கு வந்தார். பின்பு ஊழல் ஒழிப்பை மையமாக வைத்து ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கினார். 2013-ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, முதல் முயற்சியிலேயே காங்கிரஸை தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது. கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான கேஜ்ரிவால் முதல்வரானார். அந்த ஆட்சி குறுகிய காலம் மட்டுமே நீடித்தது. அதன் பின்பு, 2015 மற்றும் 2020 தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியை வழிநடத்தி வெற்றி பெற்று மீண்டும் மீண்டும் முதல்வரானார்.

இந்த நிலையில், 2025 தேர்தலில் வென்று மூன்றாவது முறையாக டெல்லி அரியணையில் அமரும் கனவுடன் இருந்த கேஜ்ரிவால், கடந்த ஆண்டு டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பின்பு உச்ச நீதிமன்ற ஜாமீன் மூலம் சிறையில் இருந்து வந்த கேஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, மீண்டும் மக்கள் நீதிமன்றத்தில் தனது நேர்மைக்கான தீர்ப்பு கிடைத்த பின்பே மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமருவேன் என சபதம் செய்திருந்தார். ஆனால், தற்போது முடிந்த பேரவைத் தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டு, பாஜகவின் பர்வேஷ் வர்மாவின் சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

மணீஷ் சிசோடியா: டெல்லியின் முன்னாள் துணை முதல்வர், ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாம் நிலையில் இருப்பவர். இந்த தேர்தலில் ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட சிசோடியா பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். முன்னதாக, மணீஷ் சிசோடியா கிழக்கு டெல்லியின் பட்பர்கங்ஞ் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு, எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்தத் தேர்தலில் பட்பர்கஞ்சில் இருந்து மாறி ஜங்புராவில் போட்டியிட்டார்.

மணீஷ் சிசோடியாவும் கேஜ்ரிவாலுக்கு முன்பாகவே கடந்த 2013-ம் ஆண்டு மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஜாமீனுக்கு முன்பு சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிசோடியா சிறையில் இருந்தார். இவரும் தனது ஒருங்கிணைப்பாளர் போலவே, மக்கள் தீர்ப்புக்கு பின்பே பதவியேற்பேன் என்று சபதம் எடுத்திருந்தார்.

சவுரப் பரத்வாஜ்: மிகவும் பிரபலமான ஆம் ஆம்தி தலைவர் இவர். கடந்த 2013-ல் இருந்து தொடர்ந்து மூன்று முறையாக கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் எம்எல்ஏ-வாக அவர் தேர்வாகியிருந்தார். ஆனால் 2025 தேர்தலில் பாஜகவின் ஷிஹா ராயிடம் 3,188 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பறிகொடுத்துள்ளார். டெல்லி அரசில் அமைச்சராக இருந்த சவுரப் உள்துறை, மின்சாரம் மற்றும் நீர்வளம் உள்ளிட்ட பல துறைகளை கண்காணித்து வந்தார். கிரேட்டர் கைலாஷ் தொகுதி ஆம் ஆத்மி கட்சிகான பாதுகாப்பான தொகுதி என அறியப்பட்ட நிலையில், பாஜக அதனை மாற்றி வெற்றியைத் தட்டிப் பறித்துள்ளது.

துர்கேஷ் பதாக்: ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட அமைப்புகள், கட்சியின் அரசியல் விவகார குழு, தேசிய செயற்குழுக்களின் உறுப்பினர். டெல்லி ராஜிந்தர் நகர் தொகுதியில் போட்டியிட்ட துர்கேஷ் இந்த முறை பாஜக வேட்பாளர் உமங் பஜாஜிடம் தோல்வியடைந்துள்ளார். துர்கேஷ் பதாக், கடந்த 2022-ம் ஆண்டு ராஜிந்தர் நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டவர் இம்முறை தோல்வியடைந்துள்ளார்.

சத்யேந்திர ஜெயின்: ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்டத் தலைவர், டெல்லியின் முன்னாள் அமைச்சர். டெல்லியின் ஷகுர் பஸ்தி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்துள்ளார். முன்பு இதே தொகுதியில் இரண்டு முறை சத்யேந்திர ஜெயின் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடடத்தக்கது. அரவிந்த் கேஜ்ரிவால் அரசில் கேபினட் அமைச்சராக இருந்த ஜெயின் கடந்த 2022-ம் ஆண்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்தத் தேர்தலில் ஜெயின் பாஜக வேட்பாளர் கர்னைல் சிங்கிடம் தோல்வியடைந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.