ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தலைக் காட்டிலும் இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நாதக, 1.53 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 4.08 சதவீத வாக்குகளைப் பெற்றது. கடந்த 2021- சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, மக்கள்நீதி மய்யம், அமமுக, நாதக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் வேட்பாளர் கோமதி, 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் நாதக 7.65 சதவீத வாக்குகளைப் பெற்றது.
இதன் தொடர்ச்சியாக திருமகன் ஈவெரா மறைவுக்கு பிறகு 2023-ல், ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாதக போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் களம் கண்டனர். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றார். இத்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் நாதக 6.35 சதவீத வாக்குகளைப் பெற்றது.
கடந்த 2024-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி அடங்கிய ஈரோடு மக்களவைத் தொகுதியில் நாதக சார்பில் கார்மேகன் போட்டியிட்டார். இந்த தேர்தலில், ஈரோடு கிழக்கில் மட்டும் அவர் 8.35 சதவீத வாக்குகளைப் பெற்றார். இந்த நிலையில் தற்போதைய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் திமுக – நாதக இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுங்கட்சியான திமுகவின் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றார். இம்முறை, நாதக 15.59 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்தாலும், கடந்த தேர்தலை விட இருமடங்கு கூடுதல் வாக்குகளை தனித்து போட்டியிட்டு நாதக பெற்றுள்ளது.தேர்தலில் பதிவான வாக்குகளில் 16.7 சதவீத வாக்குகளை ஒரு வேட்பாளர் பெறுவார் எனில், அவர் டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற தகுதியுடையவர் ஆவார். இந்த தேர்தலில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 15.59 சதவீத வாக்குகள் மட்டும் பெற்றதால் அவரது டெபாசிட் தொகை பறிபோயுள்ளது.