காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் டெல்லி மக்கள் தீர்ப்பு ஒரு பாடமே… எப்படி?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே ஆம் ஆத்மி கட்சிக்கு இந்தத் தேர்தல் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றே பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கணித்தனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலவும் வெற்றி பாஜகவுக்கு என கைகாட்டின. ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வியடையும் வகையிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் போகும் என்று யாரும் கணிக்கவில்லை. இதுதான் ஜனநாயகத்தின் வலிமை. மக்கள் தீர்ப்பை யாராலும் அவ்வளவு துல்லியமாகக் கணித்துவிட முடியாது என்று உணர்த்துவது போல் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இந்த முடிவுகள் சொல்வது என்னவென்று அலசுவோம்.

முதலில் இண்டியா கூட்டணி… – நடந்தது என்னவோ சட்டப்பேரவைத் தேர்தல்தான் என்றாலும், இதன் முடிவை ஒரு பரந்துபட்ட கண்ணோட்டத்துடன் அணுகுவது அவசியமாகிறது. “ஆம் ஆத்மி இந்தளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இண்டியா கூட்டணித் தலைவர்கள் இதுகுறித்து விரைவில் கலந்தாய்வு செய்ய வேண்டும். இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றுகிற திசையில் சிந்திக்க வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியதையும், “இண்டியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் தான் உருவாக்கப்பட்டது என்றால் அதனை முடித்துக்கொள்வது பற்றி முடிவெடுக்கலாம்” என்று ஏற்கெனவே தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா கூறியதையும் கவனிக்க வேண்டும்.

இண்டியா கூட்டணி என்பது மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்க்க மட்டுமே உருவாக்கப்பட்டது போல் இயங்கினால் அதன் பலவீனம் தொடர்ந்து மாநிலத் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்பதற்கு டெல்லி தேர்தல் முடிவு ஒரு சாட்சி. ஏற்கெனவே உ.பி., ஹரியானா, ராஜஸ்தான் என்று தலைநகரை சுற்றிய பகுதிகளை தன்வசம் வைத்துள்ள பாஜக தற்போது டெல்லியையும் கைப்பற்றியுள்ளது. 26 ஆண்டுகளுக்குப் பின்னர் அமோக வெற்றியுடன் ஒரு ‘கம் பேக்’ கொடுத்துள்ளது பாஜக. இனி அடுத்து பிஹார், அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு என இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் பாஜகவின் இந்த வெற்றி வளையத்தின் விட்டம் பெரிதாகாமல் இருக்கவும் இண்டியா கூட்டணி அவசியம்.

ஈகோ பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றுகிற திசையில் சிந்திக்க வேண்டும் என்ற அறிவுரையை இண்டியா கூட்டணிக் கட்சிகள் கூடிப் பரிசீலிக்க வேண்டும் என்பது அந்தக் கூட்டணியில் உள்ள தலைவர்கள் பலரது கருத்தாக உள்ளது. ஆம் ஆத்மியும் – காங்கிரஸும் தனித்தனியாகப் போட்டியிட்டு டெல்லியை பாஜகவுக்கு கொடுத்துள்ளது. ஒருவேளை இருவரும் ஒன்றாகப் போட்டியிட்டிருந்தால் முதல் ஒரு மணி நேரத்திலேயே பாஜக தோல்வி உறுதியாகியிருக்கும் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியுள்ளார். ஆனால், டெல்லி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா, “ஆம் ஆத்மி வெற்றியை உறுதி செய்வது ஒன்றும் காங்கிரஸின் பொறுப்பு அல்லவே!?” என்று பேசியுள்ளார்.

மகாராஷ்டிரா தேர்தல் தோல்விக்குப் பின்னர் டெல்லி தேர்தல் பிராந்திய கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி பெறும், பாஜகவுக்கு மாநிலக் கட்சிகள் இன்னமும் சவால்தான் என்பதை நிரூபிக்கும் என்று நம்பின. ஆனால் 12 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆம் ஆத்மிக்கு விடை கொடுத்து, கேஜ்ரிவாலுக்கு ஷாக்கும் கொடுத்துள்ளது பாஜக.

டெல்லியில் ஆம் ஆத்மி கண்டுள்ள தோல்வி தேசத்தில் மாற்று அரசியலை உருவாக்கலாம் என்ற கட்சிகளின் எண்ணத்துக்கு பெரும் பின்னடைவு என்று ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். ஒரு பரந்துபட்ட பார்வையில் ஆம் ஆத்மியின் தோல்வி ஏற்படுத்தக் கூடிய தாக்கமாக இது இருக்கையில், சாமானியர்களுக்கான கட்சியாக பேரதிர்வை ஏற்படுத்தி 12 ஆண்டுகள் கடந்து இப்படியொரு படுதோல்விக்கு காரணம் என்னவாக இருக்க முடியும் என்பதையும் ஆராய வேண்டும்தானே.

ஊழல் எதிர்ப்பு முதல் ஊழல் முகம் வரை: “தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரிடம் நல்ல குணம், சிறந்த யோசனைகள் இருக்க வேண்டும். தூய்மையான நடத்தை உள்ளவராக இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மதுபான ஊழலில் சிக்கிக்கொண்டனர். இதனால் அரவிந்த் கேஜ்ரிவாலின் பிம்பம் சிதைந்தது. தேர்தலில் அவர்களுக்கு வாக்குகள் குறைவாகவே கிடைக்கின்றன.” – இது கேஜ்ரிவாலின் முன்னாள் வழிகாட்டி அன்னா ஹசாரேவின் பார்வை. பெரும்பாலான அரசியல் நிபுணர்களும் ஆம் ஆத்மி ஊழல் வழக்கில் சிக்கியது டெல்லி மக்கள் அக்கட்சி மீது வைத்திருந்த அபிமானத்தை வெகுவாகக் குறைத்தது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா, அரவிந்த் கேஜ்ரிவால் சிறை சென்றது ஒருபுறம் இருக்க கேஜ்ரிவாலின் ‘சீஷா மஹால்’ பின்னடைவுக்கான இன்னொரு காரணமாக அமைந்தது. மக்கள் பணத்தில் டெல்லியில் ரூ.45 கோடி செலவில் அரவிந்த் கேஜ்ரிவால் தனக்காக மாளிகை கட்டியுள்ளார் என்று அவரை பாஜக கடுமையாக விமர்சித்தது. மதுபான ஊழல், மொஹல்லா கிளினிக் பெயரில் ஊழல், மருந்து பெயரில் ஊழல், சிசிடிவி பெயரில் ஊழல், பஸ் கொள்முதலில் ஊழல் என கேஜ்ரிவால் அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கியது.

2011-ல் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் தலைமையில் ஊழலுக்கு எதிரான பேரியக்கம் நடத்திய பிரம்மாண்ட போராட்டம் மூலம் ஊடக வெளிச்சத்துக்கு வந்து, டெல்லி மக்களின் அபிமானத்தைப் பெற்று காங்கிரஸின் ஆதிக்கத்தை தகர்த்து, பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஆம் ஆத்மி இன்று ஊழல் குற்றச்சாட்டுகளால் சரிந்துள்ளது. ஆனால், அதேவேளையில் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளோ இல்லை இன்னும் பிற குற்றச்சாட்டுகளோ இந்த அளவுக்கு பெரிதாக்கப்படவில்லை என்ற பார்வையும் இங்கே முன்வைக்கப்படுகிறது.

டெல்லி மட்டுமல்ல வடக்கே பல மாநிலங்களிலும் ஆம் ஆத்மியின் வளர்ச்சியைக் கண்டு திகைத்த பாஜக கடந்த 3 ஆண்டுகளாகவே ஆம் ஆத்மியை வலுவிழக்கச் செய்ய கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அது வகுத்த வியூகத்துக்கு சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் கருவிகளாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. மேலும், வாக்காளர்கள் நீக்கம், சேர்த்தலிலும் நிச்சயமாக முறைகேடுகள் நடந்துள்ளன. மக்கள் தீர்ப்பைத் தாண்டி இதனை கட்டமைக்கப்பட்ட மக்கள் தீர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும் என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

‘ஆம் ஆத்மி’-யை காலி செய்ய நினைத்தது ஏன்? – இந்த இடத்தில் ஆம் ஆத்மியை நிலைகுலையச் செய்வதில் பாஜக ஏன் இத்தனை பிரயத்தனங்களை மேற்கொண்டது என்பதற்கு ஆம் ஆத்மி ஒரு கட்டத்தில் தன்னை பாஜகவின் ‘பி’ டீம் போல் காட்டிக் கொள்ள முயன்றதும் கூட காரணமாகக் கூறலாம் என்கின்றனர். குறிப்பாக இந்துத்துவாவைப் பொறுத்தவரையில் ஆம் ஆத்மியின் நிலைப்பாடுகள் பாஜகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியில் புதிதாக சனாதன் சேவா சமிதி துவக்கப்பட்டதை ஓர் உதாரணமாக சுட்டிக்காட்டலாம். கடந்த ஜனவரி 8-ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் நிர்வாகிகள் பட்டியலில் பாஜகவிலிருந்து கட்சி மாறி வந்தவர்களுக்கும் இடம் அளிக்கப்பட்டது. இதன் அறிமுக நிகழ்ச்சியில் டெல்லியின் பல முக்கிய துறவிகளான மடாதிபர்கள், அகாடாக்களின் மகாமண்டலேஷ்வர்கள், ஜெகத்குருக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட கேஜ்ரிவால், “கோயில்களின் பண்டிதர்களும், பூசாரிகள் 24 மணி நேரமும் பணி செய்கிறார்கள். இவர்கள், கடவுள் மற்றும் மனிதர்களுக்கு இடையிலான பாலமாகச் செயல்படுகின்றனர். இதுபோன்றவர்களுக்கு சேவை செய்ய ஆம் ஆத்மி கட்சி இந்தப் பிரிவைத் துவக்கித் தயாராவது எங்கள் பாக்கியம்” எனப் பேசியிருந்தார்.

ஆம் ஆத்மியின் இந்த நடவடிக்கையை ஹைதராபாத் எம்.பி.,யும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ‘பாஜக, ஆத்மியின் இரண்டு கட்சிகளுக்குமே தாய் அமைப்பாக ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுமே இந்துத்துவா கட்சிகள்’ என விமர்சித்திருந்தார். ஆம் ஆத்மி முன்னெடுத்த சாஃப்ட் இந்துத்துவா (Soft Hindutuva) கொள்கை பாஜகவுக்கு குடைச்சலாகவே இருந்தது.

அதேபோல் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு கேஜ்ரிவால் ஒரு கடிதம் எழுதினார். அதில், “கடந்த காலங்களில் பாஜக செய்த தவறுகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பணம் விநியோகம் செய்கிறார்கள். வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? தலித்துகள் மற்றும் பூர்வகுடிகள் வாக்குகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கை ஜனநாயகத்துக்கு சரியானது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா? பாஜக ஐனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என்று எண்ணுகிறதா?” என்று தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதுவும் பாஜகவுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

ஆம் ஆத்மியின் மக்கள் அபிமான, பெருகும் செல்வாக்கு, சாஃப்ட் இந்துத்துவா அடையாளம் என எல்லாவற்றையும் உடைத்து டெல்லியை கைப்பற்ற வேண்டும் என்றே பாஜக வியூகங்களை வகுத்து செயல்படத் தொடங்கியது. அதில் வெற்றியும் கண்டுள்ளது. உண்மையில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைநகர் டெல்லியை கைப்பற்றியது பாஜகவுக்கு இன்னுமொரு சக்சஸ் என்றால் ஆம் ஆத்மியை நொறுக்கியது சாதனை.

டெல்லியில் மொத்தமுள்ள தொகுதிகள் 70. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை எனும் நிலையில், 48 இடங்களைக் கைப்பற்றி பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில், வெறும் 22 தொகுதிகளை மட்டும் வசமாக்கிய ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கிறது. காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் காங்கிரஸ் பூஜ்ஜியம் பெறுவது இது மூன்றாவது முறை என்பதையும் கவனிக்க வேண்டும்.

இனி பஞ்சாப்புடன் ஆம் ஆத்மியின் வீச்சை சுருக்க இல்லை, அதுவும் இல்லாமல் துடைக்க அடுத்த வியூகங்களை பாஜக வகுக்கும். பாஜகவின் வெற்றியே அந்தத் தேர்தல், இந்தத் தேர்தல் என்றில்லாமல் நீண்ட கால அரசியலுக்கான வியூகங்களை வகுப்பதே. இந்தச் சூழலில் ”காங்கிரஸ் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்” என்று மட்டும் பிரியங்கா காந்தி சொல்லியிருப்பது மேம்போக்கான அரசியல் பார்வை, பலவீனமான அரசியல் போக்கு. இது காங்கிரஸ் எங்கேயும் கொண்டு சேர்க்காது.

காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி, ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல… இந்தத் தேர்தல் பாஜகவுக்கும் பாடம் கற்பித்துள்ளன. அதற்கு இங்கே இன்னொரு விஷயத்தையும் உற்று நோக்க வேண்டும். இதுவரை ‘இலவசம்’ என்று சாடி வந்த பாஜக இப்போது டெல்லி தேர்தல் வெற்றியின் மூலம், ‘இலவசம் என்பது எளிய மக்களுக்கான நலத்திட்டம்’ என்ற தெளிவைப் பெறும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆம், பெண்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்பன உள்ளிட்ட இலவச வாக்குறுதிகளை அளித்ததும் டெல்லியில் பாஜகவின் வெற்றிக்கு வித்திட்டதாக அழுத்தமாக கூறுகின்றனர் அரசியல் கருத்தாளர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.