மகேந்திரிகிரி: ககன்யான் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் சிஇ20 என்ற கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையை மகேந்திரிகிரியில் உள்ள பரிசோதனை மையத்தில் இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோ தயாராகி கொண்டிருக்கிறது. இத்திட்டத்துக்கு பயன்படுத்தும் எல்விஎம்3 ராக்கெட்டின் இறுதி கட்டத்தில் சிஇ20 கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தப்படும். இது விண்ணில் காற்று இல்லாத இடத்தில் இயங்கக்கூடிய இன்ஜின்.
இந்த பரிசோதனை தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தின் மகேந்திரிகிரியில் உள்ள இஸ்ரோ பரிசோதனை மையத்தில் நேற்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. காற்று இல்லாத வெற்றிட சூழலில் சிஇ20 கிரையோஜெனிக் இன்ஜினை இயக்கி பரிசோதித்தபோது, எதிர்பார்த்தபடி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த இன்ஜின் இஸ்ரோவால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடித்தக்கது.