சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. மத்திய அரசு உங்களால் ஆன தடைகளை ஏற்படுத்துங்கள். அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து தமிழகத்தை வளர்த்தெடுப்போம் என்று ஆவடியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிப்பட்டிருப்பதைக் கண்டித்து சென்னை அருகே ஆவடியில் நேற்று திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். பெரியார் மண்ணில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. திருத்தணியைக் காக்கப் போராடியது போல இப்போது தமிழகத்தின் உரிமையைக் காக்கும் வகையில் குரல் கொடுக்க ஒன்று கூடியுள்ளோம். தமிழகத்தை மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது.
மத்திய நிதி நிலை அறிக்கை வெற்று அறிக்கையாகத்தான் இருக்கிறது. இதில், தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே எதுவுமில்லை. உழவர்களின் 4 ஆண்டுகள் போராட்டத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தத் திட்டமும் இல்லை. மத்திய நிதி நிலை அறிக்கையில், தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் இல்லை. ரயில்வேயிக்கு கூடுதல் நிதி இல்லை. மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்திற்கு நிதி இல்லை. பெஞ்சல், மிக்ஜாம் புயலுக்கு நிவாரணம் தரவில்லை. மதுரை எய்ம்ஸ் நிதி ஒதுக்கவில்லை. கடன் தருகிறோம் என சொல்வது நியாயமா! மத்தியில் நடப்பது ஆட்சியா அல்லது வட்டிக் கடையா? தமிழகத்தைப் பிடிக்கவில்லை அதனால்தான் நிதி கொடுக்க மறுக்கிறார்கள்.
நீங்கள் நிதி தராமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். நீங்கள் வஞ்சிப்பவர்கள். நாங்கள் வாழ வைப்பவர்கள். பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது மத்திய அரசிடம் என்ன எதிர்பார்த்தாரோ அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். தமிழக வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் கெட்ட நோக்கத்துடன் ஆளுநர் பேசி வருகிறார். தொழிற்சாலைகள் வெளி மாநிலத்திற்குப் போவதாக எந்த ஆதாரத்தில் பேசுகிறார். மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டுகிறது. ஆளுநர் பாராட்டு எங்களுக்குத் தேவையில்லை. நம்மை 2026-ல் ஆட்சியில் அமர வைக்க, ஆளுநரும், அண்ணாமலையும் போதும்.
தமிழக வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. குழப்பம் ஏற்படுத்த முடியுமான்னு பார்க்கிறார்கள். புதுப்புது பிரச்சினையை கிளப்பி கலவரம், வன்முறை செய்யலாம்னு செயல்படுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழர் என்ற உணர்வோடு மக்கள் வாழ்கிறார்கள். முடிந்தவரைக்கும் தடையை ஏற்படுத்துங்கள். நாங்கள் அந்தத் தடைகளை தகர்த்தெறிந்து தமிழகத்தை வளர்த்தெடுப்போம். உங்களுக்கும், உங்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுகவுக்கும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.