புதுடெல்லி:டெல்லி சட்டப்பேரவையில் முஸ்லிம் எம்எல்ஏக்கள் அதிகம் கொண்ட கட்சியாக ஆம் ஆத்மி இருந்தது. இந்தநிலை மீண்டும் தொடர்கிறது. டெல்லியில் முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம் இருப்பினும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறார்கள்.
கடந்த 2020 சட்டப்பேரவை தேர்தலில் 5 முஸ்லிம் வேட்பாளர்களுடன் இந்த 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றது. இதற்கு, குடியுரிமை திருத்த சட்டத்தை தடுக்க ஆம் ஆத்மிதான் சிறந்த கட்சி என முஸ்லிம்கள் கருதியதால் காங்கிரஸால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை.
டெல்லியின் முஸ்தபாபாத், சாந்தினி சவுக், மத்தியா மஹால், பாபர்பூர், சீலாம்பூர், ஓக்லா, பலிமாரன் ஆகியவை இந்த 7 தொகுதிகளாகும். இந்த தேர்தலில் முஸ்தபாபாத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் மோகன் சிங் பிஷ்த் 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மற்ற 6 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் இந்த 7 தொகுதிகள் அன்றி மேலும் 5-ல் முஸ்லிம் வாக்குகள் அதிகம் உள்ளன. இவற்றை குறி வைத்து 2020 தேர்தலில் சுயேச்சைகள் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்தும் 16 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தமுறை 30-க்கும் அதிகமான முஸ்லிம்கள் போட்டியிட்டனர்.
2020-ல் ஆம் ஆத்மியின் 5 பேருக்கு வெற்றி கிடைத்தது. இந்த ஐந்தில் மட்டுமே காங்கிரஸுக்காக முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் 7 தொகுதிகளில் முஸ்லிம்களை நிறுத்தியும் பலன் கிடைக்கவில்லை.
இதேபோல் ஹைதராபாத் எம்.பி. அசதுத்தீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்காக 4 தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம்களும் தோல்வி அடைந்தனர். வழக்கம்போல், பாஜக இந்த தேர்தலிலும் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.