திருச்சி: தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் மூடப்படாது என்று கூட்டுறவு மற்றும் உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சியில் ரேஷன் கடைகள் மற்றும் புதிதாக அமைக்கப்படும் முதல்வர் மருந்தகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் மருந்தகம் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும். இங்கு 186 தரமான மருந்துகள் விற்கப்படும். இவற்றில் 90 சதவீதம் ஜெனரிக் மருந்துகளாகும். இங்கு சித்தா, ஹோமியோபதி மருந்துகளும் கிடைக்கும்.
மொத்தம் திறக்கப்பட உள்ள 1,000 மருந்தகங்களுக்கு 300 தனி நபர்கள் உரிமம் பெற்றுள்ளனர். அதேபோல, 440 சங்கங்கள் உரிமம் பெற்றுள்ளன. இன்னும் 402 பேர் உரிமம் பெற உள்ளனர். 898 கடைகள் தயார் நிலையில் உள்ளன. முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுவதால், அம்மா மருந்தகங்கள் ஒரு போதும் மூடப்படாது. அவை தொடர்ந்து செயல்படும்.
முதல்வர் மருந்தகங்களில் பொது மருந்துகள் 10 சதவீதம் விலை குறைவாக கிடைக்கும். இவற்றின் மூலம் மக்களின் மருத்துவச் செலவு மாதம் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
11.98 லட்சம் டன் நெல்: திருச்சி அடுத்த பூங்குடி கிராமத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட ராதாகிருஷ்ணன், அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த செப்.1 முதல் நேற்று முன்தினம் வரை 2,560 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1.66 லட்சம் விவசாயிகளிடமிருந்து, 11.98 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,603.14 கோடி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் 3,50,321 டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.