கோவை: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கான காரணம் பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்கள் மனதைத் தொட்டுள்ளது என்பது தான் என பாஜக தேசியக்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று வந்த போதிலும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
பாஜக தற்போது 48 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த மாற்றம், வெற்றிக்கான காரணம் பிரதமர் மோடியின் திட்டங்கள் மக்கள் மனதைத் தொட்டுள்ளது என்பது தான்.
ஆம் ஆத்மி கட்சி ஆரம்ப கட்டத்தில் மிகவும் எளிமையாக இருந்தவர்கள் இன்று ஊழல் செய்து ஆடம்பரமாக உள்ளனர். வாக்கு இயந்திர கோளாறு, சோதனை, கைது என ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக பேசலாம்.
ஜீரோ எம்எல்ஏ என்பதை ஹாட்ரிக்காக வாங்கிய ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தமிழர் பகுதிகளில் நானும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சென்ற போது அங்குள்ள தமிழர்கள் மத்தியிலும், பாஜகவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்பதை நேரில் பார்க்க முடிந்தது.
இடைத்தேர்தலில் பொதுவாக ஆளும்கட்சி தான் வெற்றி பெறும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிகள் போட்டியில் இல்லை என்றாலும் பணத்தை வழங்கி திமுக வெற்றி பெற்றுள்ளது. இதை பெரும் வெற்றியாக திமுக கருத முடியாது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் அடங்கும் கட்சியாகும். தேசிய அரசியல் குறித்து அவர்கள் பேசும் கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய நிதி வழங்கப்படவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுவது அப்பட்டமான பொய்யாகும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுகிறது. இதையெல்லாம் மறைப்பதற்காகவே மத்திய அரசு மீது முதல்வர் ஸ்டாலின் வீண் பழி சுமத்துகிறார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும். கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றி இந்து மதத்தினரின் உணர்வுகளை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.