புதுடெல்லி: நடந்து முடிந்த டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதன் வாக்கு சதவீதத்தில் 10 சதவீதத்தை இழந்துள்ளது. அதே நேரத்தில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் சற்று ஏற்றம் கண்டுள்ளன.
2025 டெல்லி பேரவைத் தேர்தல் வாக்காளர்களின் மனதில் நிகழ்ந்திருக்கும் பெரிய மாற்றத்தினை வெளிப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக வரலாற்று வெற்றி பெற்றிருக்கும் பாஜக, 27 ஆண்டுகளுக்கு பின்பு தலைநகரில் அரியணையைக் கைப்பற்றியிருக்கிறது. மறுபுறம் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து டெல்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, வாக்கு சதவீதம் மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கையில் கணிசமான பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சியை அமைப்போம் என்ற பெருங்கனவுடன் களம் கண்ட ஆம் ஆத்மி கட்சி, இந்த தேர்தலில் தனது வாக்கு விகிதத்தில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தை இழந்துள்ளது. அதாவது, கடந்த 2020 பேரவைத் தேர்தலில் 53.57 சதவீதமாக இருந்த வாக்கு விகிதம், இந்த 2025 தேர்தலில் 43.55 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த சரிவு ஆம் ஆத்மி வெற்றி பெற்ற தொகுதிகளிலும் எதிரொலித்துள்ளது.
பாஜகவின் வாக்கு சதவீதம் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020 தேர்தலில் 38.51 சதவீதம் பெற்றிருந்த பாஜக, இந்த 2025 தேர்தலில் 45.76 சதவீதம் பெற்றுள்ளது. இந்த ஏற்றம் பாரதிய ஜனதா கட்சிக்கு 48 இடங்களை கைப்பற்றவும், ஆட்சி அமைக்கவும் வழிவகுத்துள்ளது.
இந்த முறை டெல்லி தேர்தலில் மூன்றாவது போட்டியாளராக களம் கண்ட காங்கிரஸ் கட்சி, சிறிய அளவிலான ஆறுதல் ஏற்றத்தைக் கண்டுள்ளது. அக்கட்சியின் வாக்கு சதவீதம் கடந்த 2020 தேர்தலில் பெற்ற 4.26 சதவீதத்தில் இருந்து இந்த தேர்தலில் 6.36 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த மிகச்சிறிய ஆறுதல் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான உதவியையும் செய்யவில்லை. டெல்லி பேரவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எந்தத் தொகுதியையும் கைப்பற்றாமல் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது.
1.99 சதவீதம் மட்டுமே: இந்தத் தேர்தலில், பாஜக 45.76 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 43.55 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் சுமார் 1.99 சதவீதம் மட்டுமே. இது, 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சி வழிவகுத்ததைக் காட்டுகிறது.
ஆம் ஆத்மி வாக்கு சதவீத சரிவுக்கான காரணிகள் > வாக்களர்களின் இழப்பு: பட்டியல் பிரிவினர் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் வெற்றி பெற்று அதனைத் தனது கோட்டையாக ஆம் ஆத்மி கட்சி தக்கவைத்து கொண்டுள்ளது. டெல்லியிலுள்ள 12 தனித்தொகுதிகளில் எட்டுத் தொகுதிகளையும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள ஏழு தொகுதிகளில் ஆறு தொகுதிகளிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. என்றாலும் இந்த வெற்றிகள் அதன் வாக்கு சதவீதத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்ய முடியவில்லை.
முஸ்லிம் வாக்குகள் பிளவு: கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலில் பெரும்பானமையான முஸ்லிம்கள் ஆம் ஆத்மி பக்கம் நின்று வாக்களித்தனர். என்றாலும் தற்போதைய 2025 தேர்தலில் கணிசமான முஸ்லிம் வாக்காளர்கள் ஏஐஎம்ஐஎம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாறியிருந்தனர். இது முஸ்தாஃபத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு வழிவகுத்தது. அந்த தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வருகை, பாஜக 17,578 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது.
பாஜகவின் புகழும், மோடியின் உத்தரவாதமும்: இதற்கு முன்பு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து ஆதரித்த மக்கள், பேரவைத் தேர்தலில் பாஜகவை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்தமுறை மக்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். மோடியின் தலைமை மீதான நம்பிக்கை மற்றும் நலத்திட்டங்கள் தொடரும் என்ற அவரின் உத்தரவாதத்தை நம்பி வாக்களித்துள்ளனர்.
காங்கிரஸின் பங்கு: பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், அதன் வாக்கு விகிதத்தை 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி, பல தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு வழிவகுத்தது.
முஸ்லிம்களுக்கான பாஜகவின் வாக்குறுதி: இந்தத் தேர்தலில் முஸ்லிம் வாக்களர்களிடம் எதிர்பாராத வகையில் ஊடுருவி, கடந்த 2020 ஆண்டு தேர்தலில் பெற்ற 3 சதவீத வாக்குகளில் இருந்து 12 -13 சதவீத வாக்குளை முஸ்லிம்களிடம் பெற்றுள்ளது.
பிராந்திய அளவிலான ஆம் ஆத்மியின் செயல்பாடுகள்: ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலும் மத்திய டெல்லி, வடகிழக்கு மற்றும் தெற்கு டெல்லியில் தான் கணிசமான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அங்கு பட்டியல் சமூகம் மற்றும் உழைப்பாளர்கள் மத்தியில் கட்சிக்கான தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேபோல், பாஜகவின் செல்வாக்கு மிக்க மேற்கு மற்றும் வடக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி கிட்டத்தட்ட முழு தோல்வியைச் சந்தித்துள்ளது.
மத்திய டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 6 தொகுதிகளிலும், வடக்கு மற்றும் கிழக்கு டெல்லியில் 5 தொகுதிகளிலும், தெற்கு டெல்லியில் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், மேற்கு டெல்லியில் 2 இடங்கள், வடக்கு டெல்லியில் 3 இடங்களில் மட்டுமே ஆம் ஆத்மி வெற்றிபெற்றுள்ளது. டெல்லி தேர்தலில் சரிவினைச் சந்தித்திருந்தாலும் டெல்லியில் உள்ள ஏழை மக்களிடையே ஆம் ஆத்மி கட்சி தனது செல்வாக்கை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.