திண்டுக்கல்: பழநி செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கிறது. மாவட்ட எல்லையில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் ஒளிரும் ஸ்டிக்கர் அடங்கிய குச்சிகள் இந்த ஆண்டு போதிய அளவு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு தைப்பூசவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி நோக்கி செல்கின்றனர். இவர்கள் காலணிகள் அணியாமல் நடப்பதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள பகல் நேரத்தில் ஆங்காங்கே தங்கி ஓய்வடுத்துவிட்டு அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக பயணம் மேற்கொள்ளகின்றனர்.
இதனால் பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவருகிறது. இரவு நேரத்தில் பக்தர்கள் நடப்பதற்கு வசதியாக ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் மின்விளக்கு வசதி செய்துதரப்பட்டுள்ளது. மேலும் அதிகாலை நேரங்களில் அடர்ந்த பனி காணப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
இருதினங்களுக்கு முன்பு திண்டுக்கல்- நத்தம் சாலையில் நொச்சி ஓடைப்பட்டி அருகே காரைக்குடியை சேர்ந்த 8க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுவாக அதிகாலை பழநி நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் லாரி புகுந்ததில் காரைக்குடியை சேர்ந்த இளைஞர் நவீன்குமார் (24) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இளைஞர்கள் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு நத்தம் சாலையில் மையம்பட்டி என்ற இடத்தில் பாதயாத்திரையாக பழநி நோக்கி சென்ற புதுக்கோட்டை மாவட்டம் சரவணன்(30) என்பவர் மீது அரசு பேருந்து மோதியதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் நேற்றுமுன்தினம் இரவு வேடசந்தூர் அருகே பாதயாத்திரையாக பழநிக்கு சென்ற திருச்சியை சேர்ந்த ஆனந்த் (50) என்பவர் இருசக்கர வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
இதற்கு முன்னதாக பழநிக்கு பாதயாத்திரையாக சென்ற ஈரோடு மாவட்ட பக்தர்கள் தாராபுரம் சாலை, ஒட்டன்சத்திரம் சாலை பகுதிகளில் ஏற்பட்ட வெவ்வேறு விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்த நிகழ்வும் நடந்துள்ளது.
பழநி தைப்பூசம் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள நிலையில் சாலைகளில் பாதயாத்திரையாக பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போலீஸார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். பழநி நோக்கி செல்லும் சாலையில் வாகனங்கள் வேகக்கட்டுப்பாட்டுடன் செல்ல போலீஸார் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கவேண்டும்.
கடந்த ஆண்டுகளில் இரவில் நடக்கும் பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பு கருதி, ஒளிரும் ஸ்டிக்கர்கள் மாவட்ட எல்லைகளில் அதிக எண்ணிக்கையில் வழங்கப்பட்டது. இதை பழநிக்கு நுழையும் போது பக்தர்களிடமிருந்து திரும்ப வாங்கிக்கொண்டு சுழற்சி முறையில் மீண்டும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் நுழையும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மாவட்ட எல்லையில் போதுமான அளவு ஒளிரும் ஸ்டிக்கர் குச்சிகள் வழங்கப்படவில்லை. இதுவும் விபத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.
இதுகுறித்து பாதயாத்திரை பக்தர்கள் கூறுகையில், பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தவேண்டும். வழக்கமாக ஒட்டன்சத்திரம்-பழநி இடையே ஒரு வழிபாதையாக அமைத்து பக்தர்களுக்கு வசதிகள் செய்துதரப்படும். பக்தர்களுக்கு சமையல் செய்வதற்கு பொருட்கள் கொண்டுசெல்லப்படும் வாகனங்கள் உள்ளிட்ட ஒரு சில வாகனங்களுக்கு மட்டும் போலீஸார் மூலம் ‘கார் பாஸ்’ வழங்கப்பட்டு இருவழி போக்குவரத்து குறைக்கப்படும்.
ஆனால் தற்போது புறவழிச்சாலை அமைக்கப்பட்டதை காரணம் காட்டி வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்படவில்லை.
போக்குவரத்து போலீஸார் பழநி- ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் சாலையில் அதிக கவனம் செலுத்தி வாகனங்களை குறைந்த வேகத்தில் இயக்க எச்சரித்து அனுப்பவேண்டும். திண்டுக்கல் மாவட்ட எல்லைகளில் அதிகளவில் ஒளிரும் ஸ்டிக்கர் குச்சிகளை பக்தர்களுக்கு வழங்கவேண்டும். அதிகாலை மற்றும் இரவு பயணத்தை தவிர்க்க பக்தர்களுக்கு அறிவுறுத்தவேண்டும், என்றனர்.