‘‘ஆம் ஆத்மி கட்சியின் மதுபான கொள்கை, அர்விந்த் கேஜ்ரிவாலை வீழத்தி விட்டது ’’ என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான இயக்கத்தை கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கினார். இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அர்விந்த் கேஜ்ரிவால், அன்னா ஹசாரேவுடன் நெருக்கமானார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ரலேகான் சித்தி கிராமத்தில், அன்னா ஹசாரேவை அர்விந்த் கேஜ்ரிவால் அடிக்கடி சந்தித்து பேசினார். முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி என்பதால், தனது இயக்கத்தில் முக்கிய நபராக அர்விந்த் கேஜ்ரிவால் செயல்பட அன்னா ஹசாரே அனுமதித்தார். இது அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு திருப்பு முனையாக அமைந்தது. அன்னா ஹசாரே அமைப்பிலிருந்து வெளியேறிய அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லியில் ஆம் ஆத்மி என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.
அன்னா ஹசாரேவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக இவர் போராட்டம் நடத்தியவர் என்பதால், இவருக்கு டெல்லி மக்களின் ஆதரவு கிடைத்தது. இது தேர்தலில் வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி அமைக்க வழிவகுத்தது. தொடக்கத்தில் கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சார ஆகிய துறைகளில் மக்கள் பயனடையும் வகையில் மாற்றங்களை கொண்டு வந்தார். மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தி மது விற்பனையை தனியாரிடம் வழங்கியதில் இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுவே அவரும் அவரது கட்சியின் மூத்த தலைவர்களும் சிறை செல்வதற்கு வழிவகுத்தது. இதன் தாக்கம் டெல்லி சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலித்தது. கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தற்போது நடைபெற்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது.
இது குறித்து அன்னா ஹசாரே அளித்த பேட்டியில், ‘‘ அர்விந்த் கேஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்கியபோது, அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்தனர். வாக்காளரின் நம்பிக்கை மற்றும் ஆதரவை பெறுவதில் வேட்பாளரின் நேர்மை முக்கிய பங்காற்றுகிறது என கேஜ்ரிவாலிடம் கூறி வந்தேன். ஆனால், அவர் அதை கண்டுகொள்ளவில்லை. எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு சேவை ஆற்றுவது, கடவுளை வழிபடுவது போன்றது. இதை அவர் புரிந்து கொள்ளவில்லை.
மக்களுக்கு தன்னலமற்ற சேவை செய்யும் பாதையில் இருந்து ஆம் ஆத்மி விலக ஆரம்பித்தது. அவர் மதுபான கொள்கையை ஊக்குவித்து, பணத்தின் பின்னால் செல்ல ஆரம்பித்தார். இது அவரையும், அவரது ஆம் ஆத்மி கட்சியையும் வீழ்த்திவிட்டது’’ என்றார்.