பிரயாக்ராஜ் நகர்: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இன்னும் 19 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை 50 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக நகரத்தில் 19-வது செக்டாரில் “கல்பவாசி” கூடாரத்தில் நேற்று திடீரென தீப்பற்றியது. வாயு கசிவால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 10 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாகி விட்டன.
முன்னதாக செக்டார் 18 பகுதியில் இஸ்கான முகாமில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குள் மற்றொரு தீவிபத்து அப்பகுதியில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.