அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த பிப் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியிருக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நிகழ்ச்சி பிப் 10-ம் தேதியான இன்றும், தைப்பூச தேரோட்டம் நிகழ்ச்சி 11ஆம் தேதியான நாளையும் நடைபெற உள்ளது. பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி என காவடி படை ஒருபுறம், ஆயிரக் கணக்கான பக்தர்கள் படை மறுபுறம், சந்தன மொட்டை படைகள் என பழநி பெரும் விழாக் கோலம் பூண்டுள்ளது. தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கிலுமிருந்து பக்தர்கள் பழநி மலையில் குவிந்த வண்ணமிருக்கின்றனர்.

பக்தர்களுக்கு இலவச பேருந்து, ரயில் வசதி, ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், அன்னதானம் என பல்வேறு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மேலே மலைக் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு மங்கம்மாள் மண்டபம் வழியாக கீழே இறங்கி வரவும் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் கூட்டம் அதிகமாகி வருவதால் முருகனை தரிசிக்க 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு இன்று முதல் 3 நாள்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப் 10, பிப் 11, பிப்.12 ஆகிய 3 தேதிகளில் பக்தர்கள் அனைவரும் பொது தரிசன பாதை வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.