மணிப்பூர் கலவரம்: 2 ஆண்டுகள் மறுத்த முதல்வர், இப்போது ராஜினாமா செய்வது ஏன்..? பின்னணி என்ன?

மணிப்பூரில் இரு சமுதாயத்திற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த தொடர் வன்முறையில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பா.ஜ.கவை சேர்ந்த முதல்வர் பிரன் சிங் ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது. ஆனாலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்து வந்தார் பிரன் சிங். பிரதமர் நரேந்திர மோடியும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செல்ல மறுத்துவிட்டார்.

பிரன் சிங் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியில் வந்தது. அதனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திடீரென பிரன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இரண்டு ஆண்டுகள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த பிரன் சிங் இப்போது ஏன் ராஜினாமா செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி பிரன் சிங் அரசு மீது இன்று நடக்க இருந்த சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு இருந்தது. இத்தீர்மானத்திற்கு பா.ஜ.கவைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக வாக்களிக்க திட்டமிட்டு இருந்தது புலனாய்வுத்துறையின் தகவல் மூலம் தெரிய வந்தது. அதோடு சபாநாயகர் சத்யபிரதா, அமைச்சர் கெம்ச்சந்த் சிங் ஆகியோர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முதல்வரை உடனே மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தனர். இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

அதோடு பா.ஜ.க அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை ஏற்கெனவே கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றுக்கொண்டன. கலவரத்தின் போது பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டது. அப்படி இருந்தும் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்த பிரன் சிங் இப்போது திடீரென ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது தோல்வி அடைந்துவிடக்கூடாது என்பதற்காக அமித் ஷாவின் உத்தரவின் பேரில் பிரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் மணிப்பூர் சட்டமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.