புதுடெல்லி: நாட்டுப்புறக் கலைகள், கலாச்சாரங்களை ஊக்குவிக்கும் நோக்கில், மத்திய அரசின் தென்னக பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் அமைக்கப்பட உள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “பல்வேறு வடிவிலான நாட்டுப்புறக் கலைகள், கலாச்சாரங்களை ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், தமிழகத்தில் உள்ள உள்ளூர் கலைஞர்களின் பங்களிப்பை மேம்படுத்தும் வகையிலும் மத்திய அரசு தென்னக பண்பாட்டு மையத்தை தஞ்சாவூரில் அமைக்க உள்ளது. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களது கைவினைப் பொருட்கள், தென்னக பண்பாட்டு மையத்தின் தமிழ்நாடு உட்பட உறுப்பு மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டின் ஜவுளி கைவினைப் பொருட்கள், தொல்பொருட்களை ஆவணப்படுத்தவும், ஆராய்ச்சிப் பணிக்காகவும், வடிவமைப்பிற்கான தற்சார்பு இந்தியா மையம் (கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி நிறுவனமான) சென்னையில் உள்ள கலாஷேத்ரா அமைப்புடன் இணைந்து மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் நெசவு (பட்டு பீதாம்பரம்), மரத்தட்டு ஓவியம் (அச்சு அடகம்) கலம்காரி, கை அச்சுக்கள் ஆகியவற்றுக்கான வடிவமைப்பு வசதிகளை எளிதாக்க உதவிடும்.
பாரம்பரிய ஜவுளி நெசவாளர்கள், சாயம் பூசுபவர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் ஆகியோரின் உதவியுடன் தமிழகத்தின் தனித்துவமிக்க சித்திரங்கள், தரைகள் மற்றும் நிறங்களுடன் கூடிய ஜவுளித்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் கலாஷேத்ரா அமைப்பு செயல்படும். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள குமரகுரு நெசவு மையத்துடன் இணைந்து வண்ண நூல்களுடன் நெய்யப்பட்ட ஜமுக்காளம், தனித்துவமிக்க பருத்தி தரை விரிப்புகள் போன்ற கைத்தறிப் பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தொழிலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என தெரிவித்துள்ளார்.