புதுடெல்லி: ‘தமிழக அரசின் மசோதாக்கள் மீது ஆட்சேபனைகள் இருந்தால், நீண்ட காலம் அமைதியாக இருந்தது ஏன்?’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜரானார்.
அப்போது நீதிபதி ஜே.பி. பர்திவாலா, “மாநில அரசு ஒப்புதலுக்காக அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுத்து நிறுத்தியபோது ‘அவரது மனதில் ஏதோ ஒன்று’ இருந்துள்ளது. இருப்பினும், மசோதாக்களில் தனக்கு எரிச்சலூட்டும் விஷயங்கள் குறித்து ஆளுநர் தெரிவிக்கவில்லை. எனவே, அவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்திருக்கிறார். தனது ஒப்புதலை அளிக்க மறுத்திருக்கிறார். பின்னர் திடீரென்று அவற்றை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்காக அனுப்பி இருப்பதாக அவர் கூறுகிறார்” என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த வெங்கட்ரமணி, “மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேர்வுக் குழுவின் அமைப்பு தொடர்பான தனது ஆட்சேபனைகளை ஆளுநர் முன்னதாகவே மாநில அரசுக்கு தெரிவித்தார். பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தலைவரின் நாமினியை தேர்வுக் குழுவில் சேர்க்க ஆளுநர் கோரியிருந்தார். அதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட மாநில மசோதாக்கள், பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரை துணைவேந்தர்கள் நியமனச் செயல்முறையில் இருந்து நீக்கக் கோரியது” என கூறினார்.
“அப்படியானால் மசோதாக்கள் குறித்து நீங்கள் ஏன் அமைதியாக இருந்தீர்கள்? உங்கள் அதிருப்தியை மாநில அரசிடம் ஏன் தெரிவிக்கவில்லை? அவர்கள் (மாநில அரசு) உங்களுடன் உடன்பட்டிருப்பார்களே” என்று நீதிபதி பர்திவாலா பதிலளித்தார். அதற்கு, “ஆளுநர் தனது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டு செயல்படவில்லை. மசோதாக்கள் வெறுக்கத்தக்கவை என்று கண்டறிந்த பிறகு அவற்றை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தார்” என வெங்கட்ரமணி கூறினார்.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, “ஒப்புதல் அளிக்காததற்கான காரணங்களை ஆளுநர் தெரிவித்திருக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் அவர், “பிரிவு 200-இன் கீழ் அரசியலமைப்பு அர்த்தத்தில் மாநில சட்டமன்றம் “முதலாளி” என்றும், இந்த ஷரத்தின் கீழ் ஆளுநருக்கு எந்த விருப்புரிமையும் இல்லை. ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கான காரணங்களைக் கூறினாலும் கூறாவிட்டாலும், முதல் நிபந்தனையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு உள்ளது. ஆளுநர் சட்டமன்றத்திடம் ‘நான் சொல்லும் வரை மறுபரிசீலனை செய்ய வேண்டாம்’ என்று கூற முடியாது,” என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து வழக்கை தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றம் நீதிமன்றம் ஒத்திவைத்தது. முந்தைய விசாரணையின்போது, ‘தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது; அவ்வாறு இருக்கவும் முடியாது’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதிபட தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம்: தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது: உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?