புதுடெல்லி: அடமான நகைகளை வங்கிகள் ஏலம் விடுவதில் ஏதேனும் விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.
வங்கிகளில் கடன் நகைகள் விவகாரத்தில் ஏலம் தொடர்பான விளக்கம் இன்று (பிப்.10) நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இதை திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கேள்விக்கானப் பதிலாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்தார். கனிமொழி எழுப்பியக் கேள்வியில், ‘வங்கி அல்லாத தங்க நகை அடகு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் நகைகளை ஏலம் விடுவது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்த 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து அதிகரித்திருக்கிறது. வங்கி சாராத நிதி நிறுவனங்களில் தங்க நகை கடன் வாங்கியோர் அதை திருப்பிக் கட்ட போதிய கால அவகாசம் கொடுக்கப்படாத நிலை உள்ளது.
இதுபோல திடீர் ஏலங்களால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். பெருமளவிலான இந்த ஏலம் விடும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசு ஏதும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா?
மேலும் ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு (என்பிஎப்சி) தங்கக் கடன்களுக்கான ரொக்க விநியோகத்தை ரூ.20,000 ஆகக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் 36 சதவிகிதம் பேருக்கு வங்கிக் கணக்கே இல்லை. இந்த நிலையில், வங்கி அல்லாத கடன் நிறுவனங்களின் தங்க கடன்களுக்கான ரொக்க விநியோகத்தை ரூ.20,000 எனக் கட்டுப்படுத்துவது ஏன்?’ என்று கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதிலின் விவரம்: வங்கிகள் அல்லாத கடன் நிறுவனங்கள், மற்றும் வணிக வங்கிகள் அனைத்துக்கும் இது தொடர்பாக ஒரே மாதிரியான விதிமுறைகளைத்தான் ரிசர்வ் வங்கி வகுத்துள்ளது. நிதித்துறை இணையமைச்சர் கூறியது போல இந்த நகை ஏலம் என்பது பல கட்ட செயல்முறைகளின் தொடர்ச்சியாகவே நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு நகைக் கடன் பாக்கி தொடர்பான தகவல்கள் அனுப்பப்பட்டு, அதன் பிறகே, ஏல நடவடிக்கை என்ற சூழலுக்கு தள்ளப்படுகிறது.
இன்னும் சொல்லப் போனால், ஏல நடவடிக்கைகள் கடுமையான நிபந்தனைகளுக்குப் பிறகுதான் மேற்கொள்ளப்படுகின்றன. வாடிக்கையாளர் சார்ந்த மாவட்டத்துக்குள்தான் ஏலம் நடத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நேரில் வராவிட்டால் ஏலம் நடத்த முடியாது, நகை மதிப்பீடு முழுமையடையாவிட்டால் ஏலம் விட முடியாது. ஏலத் தொகை நிர்ணயம் செய்வதிலும் பல விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. கடந்த 3, 4 மாதங்களிலான நகை விலையில் 80 சதவிதத்திற்கு குறைவாக இருக்கக் கூடாது.
தங்கத்தின் விலையை வங்கிகள் அல்லாத கடன் நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதில்லை. ஏல நடவடிக்கைகளுக்கு முன் இதுபோன்ற கடுமையான நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நிபந்தனைகள் பின்பற்றப்படாமல் நகை ஏல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், நிபந்தனைகள் எங்காவது மீறப்பட்டிருந்தால் உறுப்பினர் உடனடியாக எனது கவனத்துக்குக் கொண்டு வரலாம்.
அதேபோல, தங்க கடன்களுக்கான ரொக்கம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட விலையில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான குறிப்பிட்ட நிகழ்வுகள் இருந்தால் அதையும் எனது கவனத்துக்குக் கொண்டு வந்தால், நடவடிக்கைகள் எடுக்கிறேன்’ என்று அவர் பதிலளித்தார்.