திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக பராமரிக்கக் கோரி வழக்கு – தொல்லியல் துறை மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவிக்கவும், அந்த மலையை மீட்டு பராமரிக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கில், தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘நான் தமிழகத்திலுள்ள அனைத்து தமிழ் சமண கோயில்களின் குருவாக இருக்கிறேன். மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் சமண நினைவுச் சின்னங்கள் பல உள்ளன. திருப்பரங்குன்றம் கோயில் சமண சமயத்துக்கான பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது.

தற்போது திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது என பல இந்து அமைப்புகள் கூறுகின்றன. திருப்பரங்குன்றம் மலையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள், அவை சமண காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிபடுத்துகிறது. இவை கிபி-யின் ஆரம்ப நூற்றாண்டுகளில் இப்பகுதியில் இருந்த ஜெயின் துறவிகள், அவர்களின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் உள்ளன.

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அருகில், சமண துறவிகளுக்குச் சொந்தமான பல பாறை குகைகள் உள்ளன. இக்குகைகள் தமிழ்நாட்டிலுள்ள சமண குகைக் கோயில்கள், சமண கட்டிடக்கலை பாணியை பிரதிபலிக்கின்றன. திருப்பரங்குன்றம் சமண மத நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகும். திருப்பரங்குன்றத்தின் வடக்குப் பகுதியில் மகாவீரர், ரஸ்வநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் உள்ளன. மகாவீரர், ரஸ்வநாதர் சமண சமய தீர்த்தங்கரர்கள். பாகுபலியும் சமண சமய கடவுள். திருப்பரங்குன்றம் மலையின் ஒரே இடத்தில் பாறையின் சுமார் 1 அடி உயரத்தில் இரண்டு சமண பாறைகள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த வரலாற்று உண்மைகள் திருப்பரங்குன்றம் மலைகளில் சமண ஆதிக்கம் இருந்ததை நிரூபிக்கின்றன. சமீபத்தில், இம்மலை, அதைச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் இந்த மலைகளிலுள்ள சமண குகைகளை சீர்குலைப்பது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது சமண கோயில்கள், கட்டமைப்புகளின் புனிதத்தை அவமரியாதை செய்யும் வகையில் உள்ளது. இது சமண மக்களின் மத உணர்வுகளை பாதித்துள்ளது.

பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் சட்டப்படி, பழங்கால நினைவுச் சின்னமான திருப்பரங்குன்றம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய தொல்லியல் துறையினர் மலையை பராமரிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அத்தகைய நினைவுச்சின்னத்தில் எந்த மத நடவடிக்கையும் தொல்லியல் துறையின் அனுமதியுடன் மட்டுமே நடத்தவேண்டும். திருப்பரங்குன்றம் மலைப்பகுதி ஒரு சமண தளம் மற்றும் ஒரு வரலாற்று நினைவுச் சின்னம்.

சட்ட விரோத செயல்களால் திருப்பரங்குன்றம் மலையில் வசிப்பவர்களுக்கு இடையே மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு சமண சமயத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை பிற மதத்தினர் உரிமை கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல. திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கவேண்டும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த மலையில் சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதிப்பதோடு, திருப்பரங்குன்றம் மலையை மீட்டெடுத்து பராமரிக்க உத்தரவிடவேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, விக்டோரியா கவுரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு, அரசு எவ்வித மதபாகுபாட்டையும் காட்ட விரும்பவில்லை. மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையே விரும்புகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தமிழக தொல்லியல் துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்யவும், இந்த வழக்கை திருப்பரங்குன்றம் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகளோடு சேர்த்து பட்டியலிடவும் உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.