பெங்களூருவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சி தொடக்கம்

பெங்களூருவில் 15-வது சர்வதேச விமான கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. அந்த வகையில் 15-வது கண்காட்சி பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை பயிற்சி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் சஞ்சய் சேத், நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர். இக்கண்காட்சி வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.

விமான கட்சியை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங் பேசியதாவது: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்துவரும் வேளையில், பெங்களூருவில் ஏரோ இந்தியா விமான கும்பமேளா நடைபெறுகிறது. ஆன்மிக கும்பமேளா மனதை ஆற்றுப்படுத்தவும், விமான கும்பமேளா ஆராய்ச்சிக்காகவும் நடத்தப்படுகிறது.

அந்த கும்பமேளா நாட்டின் ஆன்மிகத்தை பறைசாற்றுகிறது. இந்த கும்பமேளா இந்தியாவின் வலிமையை உலகுக்கு வெளிக்காட்டுகிறது. ஏரோ இந்தியா கண்காட்சி பரஸ்பர உறவு, பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தளமாக அமைந்துள்ளது. அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து உலகின் பாதுகாப்பை உறுதி செய்து, அமைதியை நிலைநாட்ட வேண்டும். இந்தியா அமைதியும், வளமும் நிறைந்த மிகப்பெரிய நாடாக திகழ்கிறது.

இந்த கண்காட்சியின் மூலம் நமது விமானப் படையின் பலத்தை நிரூபிப்பதை தாண்டி, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானித்து வருகிறோம். கடந்த ஆண்டு பாதுகாப்பு துறை உற்பத்திக்கு ரூ.1.27 லட்சம் கோடி செலவிடப்பட்டது. இது 2025 – 2026 ம் ஆண்டில் ரூ.1.60 லட்சம் கோடி அளவுக்கு உயரும். இத்துறையில் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உள்ளது. இது ரூ.30 ஆயிரம் கோடியாக விரைவில் உயர்த்தப்படும். இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதில் பாதுகாப்பு துறையின் பங்கு முக்கியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் தேஜஸ், சூர்ய கிரண் ஏரோபாட்டிக் குழு (SKAT), சு-30, ஜாகுவார், ஐஜேடி, ரபேல் ஆகிய விமானங்களின் சாகசங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. கண்காட்சியில் 809 முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. இந்தியா மட்டுமல்லாது, அமெரிக்காவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.