பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். பிரான்சில் அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானுடன் சா்வதேச செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார். இந்திய-பிரான்ஸ் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டத்தில் இரு தலைவா்களும் உரையாற்ற உள்ளனர். மேலும், மாா்சே நகரில் இந்தியாவின் புதிய துணைத் தூதரகத்தை இருவரும் திறந்துவைக்க உள்ளனர். பிரான்ஸ் பயணத்தை முடித்துகொண்டு, அங்கிருந்து வரும் 12-ல் அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியா்கள் சில நாள்களுக்கு முன் நாடுகடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக தனது வெளிநாட்டு பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:-
அடுத்த சில நாட்கள் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன். பிரான்ஸ் அதிபர் அழைப்பின் பேரில், பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சுக்குச் செல்கிறேன். பாரிஸில், உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டமான ஏஐ உச்சிமாநாட்டிற்கு இணை தலைமை தாங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அங்கு பரந்த பொது நன்மைக்காக ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் ஏஐ தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்” என்றார்.