கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் பேசும்போது, ‘டெல்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. அரியானாவில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால் 2 மாநிலங்களிலும் பா.ஜனதா வென்று விட்டது. எனவே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஆனால் மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் இல்லை. நான் தனித்தே போட்டியிடுவேன். நாம் மட்டுமே போதும்’ என கூறினார்.
மாநிலத்தில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் 4-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றும் மம்தா நம்பிக்கை தெரிவித்தார். தேர்தலில் பா.ஜனதா எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் இருக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுக்கு இடையே புரிதல் இருக்க வேண்டும் எனக்கூறிய மம்தா பானர்ஜி, இல்லாவிட்டால் தேசிய அளவில் பா.ஜனதாவை கட்டுப்படுத்துவது இந்தியா கூட்டணிக்கு கடினமாக இருக்கும் என்றும் கூறினார்.