தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உட்பட தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதே அமர்வில் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த வாதம்:
தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் சிங்வி, பி.வில்சன்: சட்டப்பேரவையில் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால், ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவு கூறுகிறது. அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டே ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். தனது அதிகாரத்தை பயன்படுத்தி எந்த ஒரு தனிப்பட்ட முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாது. ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது.
ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி: மசோதாக்கள் மீது 4 வகையான முடிவுகளை எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
நீதிபதிகள்: அப்படி என்ன அதிகாரங்கள் உள்ளன? எந்த காரணமும் தெரிவிக்காமல் மசோதாக்களை நிறுத்தி வைத்துவிட்டு, ஓரிரு ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியுமா? ஒருவேளை அனுப்பினாலும், அதன்மீது குடியரசுத் தலைவர் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? ‘ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைத்தால், நிராகரித்ததற்கு சமம், அது செல்லாது’ என ஏற்கெனவே இதே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால், செல்லாத மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு எப்படி ஆளுநர் அனுப்பினார். மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க காரணம்தான் என்ன? ஆளுநர் தரப்பு வாதங்கள் முன்னுக்குப்பின் முரணாக இல்லையா?
தமிழக அரசு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்: துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் ஆளுநரின் தலையீடு இருக்க கூடாது என்பதற்காக, வேந்தர் பதவியி்ல் இருந்து ஆளுநரை நீக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.
ஆளுநர் தரப்பு: பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் ஆளுநரை அப்பதவியில் இருந்து நீக்குவது, அவரது அதிகாரத்தை பறிக்கும் செயல் என்பதால், ஆளுநர் இசைவு தெரிவிக்கவில்லை. எந்த மசோதாவையும், எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு வாதம் நடந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: ஆளுநருக்குரிய அதிகாரங்கள் என்ன என்பதை அரசியல் சாசன நிர்ணய சபையில் சட்டமேதை அம்பேத்கர் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். அதன்படி, ஆளுநருக்கு தனியாக விருப்ப உரிமை எதுவும் கிடையாது. மசோதாவுக்கு ஒப்புதல் தர முடியாது என மறுப்பு தெரிவித்தால், அதை அப்போதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்க வேண்டும். முக்கியமான அரசியல் சாசன பதவியை வகிக்கும் ஆளுநர் தனது நிலைப்பாட்டை தெளிவாக அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும். மசோதாக்களில் ஆட்சேபம் இருந்தால் ஆளுநர் இவ்வளவு காலம் அமைதி காத்தது ஏன்? ஒருவேளை, ஒப்புதல் அளிக்காததற்கான காரணத்தை தமிழக அரசுக்கு உடனடியாக தெரிவித்திருந்தால், ஆளுநருடன் அரசு உடன்பட்டு போயிருக்கும். தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆண்டுக்கணக்கில் நிறுத்தி வைத்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த வழக்கில் ஆளுநர் மற்றும் தமிழக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தனர்.