ரூ.100 கோடிக்கும் மேல் தானம் செய்த பிரபல தொழிலதிபரை, அவரது பேரன் சொத்து தகராறு காரணமாக கொடூரமாக கொலை செய்துள்ளார்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜனார்தன ராவ் (86). இவருக்கு சுமார் ரூ.500 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் உள்ளன. பல்வேறு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம், இதய நோய் சிகிச்சை மையங்கள் அமைக்க தாராளமாக நன்கொடைகளை வழங்கி உள்ளார். திருப்பதி தேவஸ்தானத்துக்கு பல கோடிகளை காணிக்கையாக வழங்கி உள்ளார். இதுவரை சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் தானம் செய்துள்ளார்.
ஜனார்தன ராவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு பிறந்த ஸ்ரீகிருஷ்ணாவை தனது நிறுவனத்தின் இயக்குநராக நியமனம் செய்துள்ளார். இதனால் மூத்த மகள், இளைய மகள் குடும்பத்தினருக்கு இடையே பிரச்சினை எழுந்துள்ளது.
இந்த சூழலில் கடந்த 6-ம் தேதி 2-வது மகள் சரோஜினி தேவி, தனது மகன் கீர்த்தி தேஜ் (28) உடன், தந்தையின் பஞ்சகுட்டா வீட்டுக்கு சென்றார். அங்கு தாத்தா ஜனார்தன ராவும், பேரன் கீர்த்தி தேஜும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நிறுவனத்தின் இயக்குநராக ஸ்ரீ கிருஷ்ணா நியமிக்கப்பட்டது, சொத்துகளை பிரிப்பது தொடர்பாக தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த பேரன் கீர்த்தி தேஜ், கத்தியால் தாத்தா ஜனார்தன ராவை கொடூரமாக தாக்கினார். 73 இடங்களில் கத்திக் குத்து காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமையல் அறையில் இருந்த சரோஜினி தேவி ஓடி வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கடந்த 8-ம் தேதி கீர்த்தி தேஜை கைது செய்தனர்.