அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரின் அதிரடி நடவடிக்கைகள், சர்ச்சைக்குள்ளாகும் சட்டங்கள், விமர்சனத்துக்குள்ளாகும் கருத்துக்களின் மூலம் தினம் தினம் செய்திகளில் இடம்பெறுகிறார். கடந்த வாரம் காஸா பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் எனப் பேசியது விவாதமான நிலையில், வரும் சனிக்கிழமைக்குள் இஸ்ரேல் பணயக்கைதிகளை ஹாமஸ் விடுவிக்க வேண்டும் என எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/trump..jpeg)
வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் காஸாவிலிருந்து மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு காஸா பகுதி முழுவதும் வெடித்துச் சிதறும். ஏற்கெனவே விடுவிக்க திட்டமிடப்பட்ட பலர் இறந்துவிட்டதாக அச்சம் இருக்கிறது. ஆனாலும், இது என்னுடைய கருத்து. இது தொடர்பாக இஸ்ரேல்தான் முடிவெடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
காஸாவை சொந்தமாக்கிக் கொள்வது குறித்த ட்ரம்ப்பின் கருத்துகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே இருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கெனவே ஆபத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், இந்தக் கருத்து தற்போது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.