சென்னை: “மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு, தேர்தல் வியூக மன்னா்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மக்களோடு கூட்டணியை வைத்துள்ளோம்” என்று தவெக தலைவர் விஜய் – தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.
சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (பிப்.11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செங்கோட்டையன் விழா புறக்கணிப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுப்பிய கேள்விக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லையே. அவருடைய குரல் ஜெயக்குமார்தான் பதில் அளித்துள்ளார். எனவே, இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் மறைந்த முதல்வர்களின் படங்களை அச்சிடாமல் ஏன் புறக்கணித்தீர்கள் என்று கேளுங்கள்” என்றார்.
அதிமுகவில் பிளவு உருவாகிவிட்டது என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, “மற்ற இயக்கங்களில் ஊடுருவுதல் எங்களுடைய பழக்கம் அல்ல. தமிழகத்தின் தற்போதைய முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோதுகூட குறுக்கு வழியில் ஆட்சிக்க வர விரும்பாதவர். நேர்வழியில் செல்பவர். எனவே, அந்தந்த இயக்கங்களில் உருவாகும் பிரச்சினைகளை அவரவர் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த கட்சி விவகாரங்களில் தலையிடுவதை எங்கள் தலைவர் எப்போதுமே விரும்பமாட்டார்” என்றார்.
வடலூரில் தைப்பூசத்துக்காக மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அந்த விவகாரத்தில் எந்த பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழர்களையே ஒரு சாரராக பிரித்து பிளவுபடுத்தி அரசியல் செய்துகொண்டிருக்கிற சக்திகள்தான், இந்த விவகாரத்தை பூதாகரப்படுத்தினர். அந்த விவகாரம் தொடர்பாக இணை ஆணையர் விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். வடலூரில் எந்த மரங்களும் வெட்டப்படவில்லை.
ஜோதி தரிசனம் அனைத்து மக்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக, வளர்ந்திருந்த கிளைகளைத்தான் ஒழுங்குப்படுத்தினோம். மரங்கள் எதுவும் வெட்டப்படவில்லை. மரங்கள் வெட்டப்பட்டதற்கு ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள். அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “மதுரை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களால் அர்ச்சகர்கள் தட்டில் போடப்படும் காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பிய கோயில் செயல் அலுவலர் மீது விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தவறிருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு, தேர்தல் வியூக மன்னர்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மக்களோடு கூட்டணியை வைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.