மகாகும்பமேளா விழாவின்போது புனித நீராட பக்தர்கள் பிரயாக்ராஜ் நகருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் பிரயாக்ராஜுக்குச் செல்லும் சாலைகளில் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி மகாகும்பமேளா விழா தொடங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் புனித நீராட நாடு முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். வரும் 26-ம் தேதி வரை கும்பமேளா நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பிரயாக்ராஜ் நகருக்கு வரும் சாலைகள், கட்டுக்கடங்காத வாகனங்களால் திணறுகின்றன. இதனால் நேற்று 300 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன.
போக்குவரத்து நெரிசல் காரணமாக, உ.பி.யையொட்டி அமைந்துள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் 7 மாவட்ட நுழைவுவாயில்களில் பிரயாக்ராஜ் நகருக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இன்று பிரயாக்ராஜ் நகருக்குச் செல்வது இயலாத காரியம். 200 முதல் 300 கிலோமீட்டர் தூரம் வரை வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் நகருக்கு வரும் பல்வேறு சாலைகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது” என்றார்.
இதுகுறித்து போலீஸ் ஐஜி (ரேவா மண்டலம்) சாகேத் பிரகாஷ் பாண்டே கூறும்போது, “வார இறுதி நாட்கள் என்பதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்த 2 நாட்களில் இந்த நிலைமை சீராகிவிடும்” என்றார்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட ஒரு பயணி கூறும்போது, “வாகனப் போக்குவரத்து நெரிசலில் கடந்த 48 மணி நேரமாக வாகனங்கள் சிக்கிக் கொண்டன. 50 கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு 10 முதல் 12 மணி நேரமாகிறது” என்றார்.
அதிக அளவில் பக்தர்கள் வருவதால் பிரயாக்ராஜ் சங்கம் ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி குல்தீப் திவாரி கூறும்போது, “அதிக அளவில் பக்தர்கள் பிரயாக்ராஜ் சங்கம் ரயில் நிலையத்துக்கு வெளியே காத்திருக்கின்றனர். இதனால் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க ரயில் நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது” என்றார்.