பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் ஹட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 11 வயது மகள் இருக்கிறாள். இந்த சிறுமி அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். தினமும் சிறுமி மதிய நேரம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் சிறுமி வீட்டு சாப்பிடுவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அப்போது அவளை வழிமறித்த அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்திரசேகர் என்பவா் சாக்லெட் கொடுப்பதாக கூறி தனது வீட்டு அழைத்து சென்றார். பின்னர் சிறுமியை வீட்டுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவளை மீட்க முயற்சித்தனர். ஆனால் சந்திரசேகர் வீட்டின் கதவு உட்புறமாக பூட்டி வைத்திருந்தார். இதனால் கதவை திறக்க முடியாமல் போனது. இதையடுத்து ஹட்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சிறுமியை மீட்டனர். மேலும் சந்திரசேகரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அப்போது கிராமமக்கள் அவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் அவரை பத்திரமாக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் ஹட்டி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.