ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய சாதனைகளை படைக்க வேண்டும்: பாரிஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பறிபோகாது என்று பாரிஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 10-ம் தேதி செயற்கை நுண்ணறிவு மாநாடு தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றார். அன்றிரவு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், அவருக்கு விருந்து அளித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இணை தலைமை ஏற்றார். அப்போது அவர் பேசியதாவது:

உங்கள் மருத்துவ அறிக்கையை ஏஐ செயலியில் பதிவேற்றினால், அது உங்களது ஆரோக்கியம் குறித்து மிக எளிமையாக விளக்கம் அளிக்கும். ஆனால் அதே ஏஐ செயலியில் இடது கை பழக்கமுடைய ஒருவரை போன்று படம் வரைய சொன்னால், பெரும்பாலும் வலது கை பழக்கமுடையவரை போன்றே படம் வரையும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் ஆற்றல் அற்புதமானது. அதேநேரத்தில் இந்த தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்கள், எதிர்மறை விளைவுகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

நமது அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, சமூகத்தை ஏஐ தொழில்நுட்பம் முழுமையாக மாற்றி அமைத்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனிதகுலத்துக்கான குறியீட்டை ஏஐ எழுதி வருகிறது.

ஏஐ தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து பல்வேறு துறைகளில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்த நேரத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை எவ்வாறு நிர்வகிப்பது, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது, அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வதேச சமூகம் சிந்தித்து மனிதகுல நன்மைக்காக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

தெற்கு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் பலன்கள் கிடைக்க வேண்டும். இந்த தொழில்நுட்பத்தால் சுகாதாரம், கல்வி, வேளாண்மை உட்பட பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

வறுமை ஒழிப்பு, சுகாதாரமான குடிநீர், அனைவருக்கும் மருத்துவ வசதி, தரமான கல்வி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத எரிசக்தி என ஐ.நா. சபை நிர்ணயித்துள்ள இலக்குகளை எளிதாகவும் விரைவாகவும் எட்ட முடியும்.

அதே நேரம் சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்களை பரப்புவது, டீப் பேக் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும் என்ற அச்சம் நீடிக்கிறது. வரலாற்றை திரும்பி பார்த்தால் எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தாலும் வேலைவாய்ப்பு பறிபோகவில்லை என்பது தெளிவாகும். ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பறிபோகாது. புதிய வகை வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இளம் தலைமுறையினருக்கு திறன்சார் பயிற்சி வழங்க வேண்டும்.

சூரிய மின்சக்தி உற்பத்தி துறையில் இந்தியாவும் பிரான்ஸும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. தற்போது ஏஐ தொழில்நுட்ப துறையிலும் இரு நாடுகளும் கைகோத்து உள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய சாதனைகளை படைக்க வேண்டும். உதாரணமாக, மின் விளக்கு எரிக்க தேவைப்படும் எரிசக்தியில் விண்கலங்களை இயக்க வேண்டும்.

இந்தியாவில் 140 கோடி மக்களின் தரவுகளை உள்ளடக்கிய டிஜிட்டல் தளம் மிக குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் பொருளாதாரம், ஆட்சி நிர்வாகம், மக்களின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. தற்போது ஏஐ சார்ந்த சேசிய திட்டத்தையும் வரையறுத்து உள்ளோம்.

உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ஏஐ தொழில்நுட்ப நிபுணர்கள் மிக அதிகமாக உள்ளனர். எங்கள் நாட்டில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகளை ஏஐ தொழில்நுட்பத்தில் ஒன்றிணைத்து வருகிறோம். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஆராய்ச்சி துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். உலகத்தின் நன்மைக்காக எங்களது அனுபவம், நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறோம்.

இப்போது ஏஐ தொழில்நுட்ப யுகத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்த தொழில்நுட்பத்தால் மனிதர்களைவிட இயந்திரங்கள் புத்திசாலிகளாக மாறிவிடும் என்று சிலர் அஞ்சுகின்றனர். நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் திறவுகோல் நம்மிடமே இருக்கிறது. இந்த பொறுப்புணர்வு நம்மை சரியான பாதையில் வழிநடத்தும். பாரிஸை தொடர்ந்து ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான அடுத்த சர்வதேச மாநாடு இந்தியாவில் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஏஐ மாநாட்டை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்தாலோசித்தார். வடக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவின் அதிபர் அலார் கரிஸ், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் பாரிஸில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள மார்சே நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு புதிதாக அமைக்கப்பட்டு உள்ள இந்திய தூதரகத்தை அவர் திறந்து வைத்தார். அந்த நகரில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானும் பிரதமர் நரேந்திர மோடியும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.