மும்பை,
மும்பை நாக்கா பகுதியை சேர்ந்த இளம்பெண் பாயல் ஷிண்டே(வயது19). இவரை தாய் வழி உறவினரான கேதர் கணேஷ் ஜங்கம் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் பாயல் ஷிண்டே வேறொருவருடன் பழகி வருவதாக கேதர் கணேஷ் ஜங்கம் சந்தேகப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் பாயல் ஷிண்டே, உதத்மா அனந்த் கன்கேர் கோல்ப் கிளப் மைதானத்தில் நடைபயிற்சி செய்துகொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த கேதர் கணேஷ் ஜங்கம் இளம்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாயல் ஷிண்டேவை சரமாரியாக வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு படுகாயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தப்பிஓடிய பொதுமக்கள் கேதர் கணேஷ் ஜங்கத்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.