பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால் அதை சுற்றியுள்ள வாராணசி, அயோத்தியில் கூட்டம் குவிகிறது. இதனால், இந்த மூன்று நகரங்களிலும் விவிஐபிகளுக்கான சிறப்பு வசதிகளை அரசு ரத்து செய்துள்ளது.
உத்தரபிரதேசம் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா ஜானவரி 13 முதல் நடைபெற்று வருகிறது. இதன் 6 ராஜகுளியல்களில் முக்கிய ஒன்றான மவுனி அமாவாசை ராஜகுளியல் முடிந்த பின்பும் பக்தர்கள் கூட்டம் குறையவில்லை. தொடர்ந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 1.44 கோடி பேர் புனித நீராட வருவதாக புள்ளிவிவரம் பதிவாகி உள்ளது.
அதேசமயம், மகா கும்பமேளா வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் அண்டை நகரங்களான வாராணசி மற்றும் அயோத்திக்கும் செல்கின்றனர். இதனால் இவ்விரு புனித நகரங்களிலும் கூட்டம் குவிந்தபடி உள்ளது.
இச்சூழலில் மகா கும்பமேளாவில் இன்று (பிப்.12) மக் பூர்ணிமாவுக்கான ராஜகுளியல் நடைபெறுகிறது. மகா கும்பமேளாவில் கல்பவாசம் இருந்தவர்கள் அதை முடிக்கும் கடைசி நாளாகும் இது. இந்தமுறை இதுவரை இல்லாத வகையில் சுமார் 10,000 பேர் திரிவேணி சங்மக் கரையில் தங்கி கல்பவாசம் செய்துள்ளனர். இதனால், திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது மேலும் அதிகரிக்க உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பிரயாக்ராஜ், வாராணசி மற்றும் அயோத்தி வரும் விவிஐபி எனும் அதிமுக்கிய நபர்களுக்கான சிறப்பு வசதிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் ரத்து செய்துள்ளார்.
மகா கும்பமேளா தொடங்குவதற்கு முன் சுமார் 45 கோடி பேர் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி புனித நீராடியவர்கள் எண்ணிக்கை 45 கோடியை எட்டி விட்டது. இத்தனைக்கும் மகா கும்பமேளா முடிய இன்னும் 15 நாட்கள் உள்ளன. எனவே, பக்தர்கள் எண்ணிக்கை 55 கோடியையும் தொடும் என உபி அரசு எதிர்பார்க்கிறது. இது ஓர் ஆன்மிக விழாவில் உலகில் எங்குமே கூடாத கூட்டம் ஆகும். எனவே இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. இந்த எண்ணிக்கையை துல்லியமாகக் கணக்கிட ஏ.ஐ. தொழில் நுட்பத்தை உபி அரசு பயன்படுத்தியது.