கும்பமேளாவுக்கு புனித யாத்திரையாக ஹைதராபாத்தில் இருந்து சென்ற 8 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் சென்று, அங்குள்ள நதியில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராட ஹைதராபாத் நாசாரம் பகுதியை சேர்ந்த 14 பேர் தனியார் மினி பேருந்து மூலம் புறப்பட்டு சென்றனர். இவர்கள் தெலங்கானாவில் இருந்து புறப்பட்டு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் வழியாக பிரயாக் ராஜை அடைய திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக சுமார் 1,200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க வேண்டி இருந்தது. நேற்று அதிகாலை மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் அருகே உள்ள நிஹாரா எனும் இடத்தில் மினி பேருந்து சென்றபோது, எதிரே சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நிஹாரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது.
மீதமுள்ளவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள், நண்பர்களிடையே பெரும் சோகம் நிலவுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த்ரெட்டி, தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கல்களையும் தெரிவித்துள்ளார்.