புதுடெல்லி: மக்களவை நடவடிக்கைகள் சமஸ்கிருத மொழியிலும் உறுப்பினர்களுக்கு விளக்கப்படும் என்ற சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்பி தயாநிதி மாறன், வரி செலுத்துவோரின் பணத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் நேற்று (பிப். 11) கேள்வி நேரம் முடிந்த உடன் சபாநயகர் ஓம் பிர்லா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மக்களவை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, அதன் மொழிபெயர்ப்புகள் உடனுக்குடன் பல்வேறு மொழிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த மொழிகளின் பட்டியலில், டோக்ரி, போடோ, மைதிலி, மணிப்பூரி, சமஸ்கிருதம், உருது ஆகிய ஆறு மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம், இந்த மொழிகள் மூலமும் உறுப்பினர்களுக்கு ஒரே நேரத்தில் விளக்கம் கிடைக்கும் என தெரிவித்தார்.
மொழிகளின் பட்டியலில் சமஸ்கிருதம் இருப்பதற்கு தயாநிதி மாறன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர், “எந்த மாநிலத்தின் அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? அந்த மொழி தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 73,000 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகிறார்கள். உங்கள் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் வரி செலுத்துவோரின் பணத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, “நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்? இது பாரதம். பாரதத்தின் மூல மொழி எப்போதும் சமஸ்கிருதம்தான். அதனால்தான், சமஸ்கிருதம் மட்டுமல்ல, 22 மொழிகளையும் குறிப்பிட்டோம். சமஸ்கிருதத்திற்கு மட்டும் ஏன் ஆட்சேபனைகளை எழுப்பினீர்கள்? இந்தியாவில் 22 மொழிகள் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதம் மற்றும் இந்தி உட்பட அந்த 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் விவாதங்கள் நடைபெறும்.” என்று கூறினார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள மு.க. ஸ்டாலின் அரசு, தேசிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காது என்று தயாநிதி மாறன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.