IPL 2025, Mumbai Indians: ஐபிஎல் தொடர் வருகிறது என்றாலே பலரும் இந்த மூன்று அணிகள் குறித்துதான் முதலில் யோசிப்பார்கள். தலா 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மற்றும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்றாலும் மிகப்பெரிய ரசிக பட்டாளத்தை கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை…
ஐபிஎல் தொடர் எப்போதும் இந்த மூன்று அணிகளை சுற்றியே பல ஆண்டுகளாக இயங்கி வந்திருக்கிறது எனலாம். அப்படியிருக்க, இம்முறை இந்த மூன்று அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியே பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என நல்ல காம்பினேஷன் மும்பை அணியில் காணப்படுகிறது. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மும்பை அணி பலமாகவே காணப்படுகிறது.
IPL 2025 MI: எப்படி இருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி?
மும்பை அணியில் இன்னும் கேப்டன் யார் என அறிவிக்கவில்லை. இருப்பினும், ஹர்திக் பாண்டியா அல்லது சூர்யகுமார் யாதவ் இருவரில் ஒருவர்தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன்ஸியை பெற இருக்கின்றனர். ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, முரட்டு பார்மில் இருக்கும் திலக் வர்மா, நமன் திர், தீபக் சஹார் என சிறப்பான இந்திய நட்சத்திர வீரர்களை மும்பை வைத்திருக்கிறது. வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டோப்ளி, அல்லாஹ் கசன்ஃபர், டிரன்ட் போல்ட், லிசார்ட் வில்லியம்ஸ் என சிறந்த வெளிநாட்டு வீரர்களையும் வைத்திருக்கிறார்கள்.
IPL 2025 MI: பும்ரா விளையாடுவது சந்தேகம்
அந்த வகையில், மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்றே தெரிகிறது. அவர் சாம்பியன்ஸ் தொடரில் விளையாட மாட்டார என்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவதும் சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது.
அவர் காயத்தில் இருந்து ஓரளவுக்கு குணமடைந்துவிட்டதாக அவர் ஸ்கேன் அறிக்கை தெரிவித்தாலும் கூட, முழு உடற்தகுதியுடன் பந்துவீச முடியுமா என்பது தெரியவில்லை. ஐபிஎல் தொடருக்கு பின் ஜுன் மாதம் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா துருப்புச்சீட்டாக இருப்பார் என்பதால் அவர் ஐபிஎல் போட்டியை விளையாடுவது 50-50 வாய்ப்புதான் உள்ளது.
IPL 2025 MI: அல்லாஹ் கசன்ஃபர் விலகல்
இதுவே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய தலைவலியை கொடுத்திருக்கும் நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான் ஆப் ஸ்பின்னர் அல்லாஹ் கசன்ஃபரும் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும், ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மற்றொரு பின்னடைவாக இருந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 4 சீசன்களாக கோப்பையை வெல்ல முடியாமல் இருப்பதற்கு தரமான சுழற்பந்துவீச்சாளர் யாருமில்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.
IPL 2025 MI: பலவீனமாகுமா மும்பை பந்துவீச்சு?
அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அல்லாஹ் கசன்ஃபரை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. ஆனால் தற்போது அவர் விலகியிருப்பது அவர்கள் மிட்செல் சான்ட்னரை அதிகளவில் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளி உள்ளது. இந்திய பிரீமியம் சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் அணியில் இல்லை. எனவே, கரண் சர்மாவுக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்கும் எனலாம். பும்ராவும், கசன்ஃபரும் இல்லாதது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பலத்தை பாதியாக குறைக்கும் எனலாம். தீபக் சஹார், கரன் சர்மா உள்ளிட்டோர் சோபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.