வாஷிங்டன்: இந்தியா உடனான உறவுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் அதிகாரி லிசா கர்டிஸ், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு ‘செக்’ வைக்க இந்தியாவே சரியான நாடு என ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதை முன்னிட்டு வாஷிங்டன் டி.சி.யை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான தி சென்டர் ஃபார் எ நியூ அமெரிக்கன் செக்யூரிட்டி (சிஎன்ஏஎஸ்) செவ்வாயன்று நடத்திய ஆன்லைன் பத்திரிகையாளர் சந்திப்பில் லிசா கர்டிஸ் உரையாற்றினார். அப்போது அவர், “டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா உடனான உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை மாற்றும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்பதையும், சீனாவை திறம்பட எதிர்கொள்வதற்கான ‘முக்கியமான கூட்டாளி’ இந்தியா என்பதையும் ட்ரம்ப் நிர்வாகம் அங்கீகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப்பின் முதல் ஆட்சிக் காலமான 2017 மற்றும் 2021-க்கு இடையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான மூத்த இயக்குநராக பணியாற்றியவர் லிசா கர்டிஸ் என்பதால், அவரது கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் அவர், “புதிய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் உள்நாட்டில் நடக்கும் அனைத்திலும் இந்தியா குறித்த கவனம் மிகவும் உன்னிப்பாக செலுத்தப்படுகிறது. இந்திய அரசும் அதன் அடிப்படை வேலைகளைச் செய்துள்ளது. வியாழக்கிழமை ட்ரம்ப் – மோடி சந்திப்புக்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைக்க ஏற்கெனவே நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ‘குவாட்’ மிகவும் முக்கியமான ஒன்று. எனவேதான், ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் நாளின்போதே, குவாட் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு நடைபெற்றதை நாங்கள் பார்த்தோம். எனவே, ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவத்தையும் குவாடில் அதன் பங்கையும் இது காட்டுகிறது. எனவே, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ – பசிபிக் பகுதியைப் பாதுகாக்க, சீனாவைத் தாண்டி மற்ற நாடுகளுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை உறுதிசெய்ய, சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்த அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவது அவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.
இவை அனைத்தும் இரு நாடுகளுக்கும் முக்கியம், இங்குதான் அவர்களின் நலன்கள் ஒன்றிணைகின்றன. எனவே, இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக உராய்வு இருந்தபோதிலும், அமெரிக்காவையும் இந்தியாவையும் ஒன்றிணைக்கும் முக்கிய காரணியாக இது இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இரு தலைவர்களும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்ட முயற்சிப்பது அவசியம்.
ஆனால், முதல் ட்ரம்ப் நிர்வாகத்தை நாம் திரும்பிப் பார்த்தால், மிகுந்த முயற்சி எடுத்த போதிலும், அவர்கள் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவில்லை. இருப்பினும், வர்த்தக உராய்வு ஒட்டுமொத்த கூட்டாண்மையை அது மூழ்கடிக்கவில்லை. ட்ரம்ப் பதவியில் இருந்து விலகும் நேரத்தில், அவர் அமெரிக்க – இந்தியா உறவை மிகச் சிறந்த இடத்தில் விட்டுவிட்டார் என்று நான் நினைக்கிறேன்.
இருப்பினும், இந்த முறை, வர்த்தகப் பிரச்சினைகளில் ட்ரம்ப்பிடம் பொறுமை குறைவாக இருப்பதை நாம் காணப் போகிறோம். இந்தோ – பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள ட்ரம்ப், இந்தியாவை அமெரிக்காவுடன் நெருக்கமாக இழுக்க விரும்புகிறார். சீனாவுடன் திறம்பட போட்டியிடுவதில் இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி என்பதில் ட்ரம்ப்பின் ஆலோசகர்கள் மிகத் தெளிவாக உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.