புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்கள் (EC) நியமனம் தொடர்பாக உருவாக்கப்பட்ட புதிய சட்டம், மத்திய அரசுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறி அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு மாற்றியது. தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 18-ம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணை 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அப்போது, மனுதாரர்களில் ஒருவரான ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அரசு சாரா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், வரும் 18-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஓய்வு பெற உள்ளதை சுட்டிக்காட்டி, எனவே, இந்த வழக்கு இந்த தருணத்தில் மிகவும் முக்கிமானது என குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதி சூர்யா காந்த், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) 2023 சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பின் விளைவுகள், இடைக்காலத்தில் ஏதாவது நடந்திருந்தாலும் (புதிய நியமனங்கள் நடந்திருந்தாலும்) அதற்கும் பொருந்தும் என்று பிரஷாந்த் பூஷனிடம் உறுதியளித்தார்.
இந்த வழக்கு முதலில் பிப்ரவரி 12-ஆம் தேதி(இன்று) பட்டியலிடப்பட்டதை பிரஷாந்த் பூஷன், நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டினார். அதற்கு நீதிபதி சூர்யா காந்த், தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், வழக்கை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு மாற்றுவதாகவும், அன்றைய தினம் நிச்சயமாக வழக்கு பட்டியலிடப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள பதிவாளருக்கும் அறிவுறுத்தினார்.
முன்னதாக, இந்த வழக்கின் முந்தைய விசாரணை பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்றது. அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவதற்கு முன்பு சட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். அதற்கு, நீதிபதி சூர்யா காந்த், இந்த வழக்கை பிப்ரவரி 12-ஆம் தேதியே விசாரித்து முடிவெடுக்க அமர்வு முயற்சிக்கும் என்று அன்றைய தினம் கூறியிருந்தார்.
பிப்.3-ம் தேதி நடந்த விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தின் ஒருங்கிணைப்பு அமர்வு, மறுத்ததை சுட்டிக்காட்டி ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார். 2023-ம் ஆண்டின் இந்தச் சட்டத்தின் செயல்பாட்டை இடைக்கால உத்தரவில் நிறுத்தி வைக்க மறுத்து, தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோரின் நியமனங்களை முடக்குவதற்கான விண்ணப்பங்களை தள்ளுபடி செய்தது.