சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் பயணிகள் அமர கூடுதல் இருக்கைகள்!

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி எதிரொலியாக, சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, நெல்லூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு தினசரி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

வேலை, கல்வி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொது மக்கள் தினமும் இந்த ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனைய வளாகத்தில் உள்ள பொதுத் தளத்தில் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. வெறும் 4 பெஞ்சுகள் மட்டுமே போடப்பட்டுள்ளதால், பயணிகள் தரையில் அமருகின்றனர். இதனால், ரயில் ஏற வரும் பயணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.

குறிப்பாக, ரயில் ஏற வரும் பயணிகளுக்கும், இறங்கிச் செல்லும் பயணிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. பலர் ரயிலை தவறவிடும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்லும் நோயாளிகளும் அமருவதற்கு இருக்கை கிடைக்காமல் தவிக்கின்றனர். இது குறித்து, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ஜன.11-ம் தேதி படத்துடன் கூடிய விரிவான செய்திக் கட்டுரை வெளியானது. இதன் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்தில் பயணிகள் அமருவதற்கு வசதியாக கூடுதல் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த நாற்காலிகள் சாயும் வசதியுடன் இருப்பதால், பயணிகள் வசதியாக அமர்ந்து ஓய்வெடுக்க முடியும். இதையடுத்து, பயணிகள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித் துள்ளனர். இப்பிரச்சினை தொடர்பாக ஏற்கெனவே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானபோது, அதிகாரிகள் கணக்குக்காக 4 பழைய சேர்களை கொண்டு வந்து போட்டனர். அதையும் சிறிது நாட்களில் திருப்பி எடுத்து சென்றுவிட்டனர். தற்போதும் அதிகாரிகள் அதுபோன்று செய்யக் கூடாது என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.