இந்து அல்லாத வெளிநாட்டினர் உடனான திருமணங்களை சிறப்பு திருமண சட்டத்தில் பதிய ஐகோர்ட் உத்தரவு 

மதுரை: இந்து மதத்தைச் சேராத வெளிநாட்டினருடன் நடைபெறும் திருமணங்களை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த இளைஞர் தனது திருமணத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், ‘நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். என் மனைவி இந்து மதத்தைச் சேர்ந்தவர். எங்களுக்கு பெற்றோர் சம்மதத்துடன் 2005-ல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் என் மனைவி தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

எங்கள் திருமணம் மனைவியின் வீட்டில் வைத்து நடைபெற்றது. கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெறவில்லை. எங்கள் திருமணம் சிறப்ப திருமணச் சட்டத்தின் கீழ் பதிவும் செய்யப்படவில்லை. இதனால் எங்கள் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கணவரின் குற்றச்சாட்டுக்கு மனைவி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இருவரின் திருமணம் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாததால் திருமணம் செல்லாது என 2016-ல் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதை ரத்து செய்யக்கோரி மனைவி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்து ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.செந்தில்குமார் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ”இருவரின் திருமண அழைப்பிதழை பார்க்கும்போது, திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது போல் தெரியவில்லை. தேவாலயத்திலும் திருமணம் நடக்கவில்லை. கணவன், மனைவி இருவரும் வெவ்வேறு மதங்களையும், வெவ்வேறு மத நம்பிக்கைகளையும் கொண்டவர்கள். இருவரின் திருமணம் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவும் செய்யவில்லை.

இரு வேறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணத்தைச் சிறப்புச் சட்டத்தில் பதிவு செய்தால்தான் செல்லுபடியாகும். இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கணவன், மனைவி இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். யாராவது ஒருவர் கிறிஸ்தவராக இருந்தால், கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து வைக்கும் அலுவலர் முன்புதான் திருமணம் நடைபெறவேண்டும். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்றால், அதாவது இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவர் அல்லது இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டால் அவர்களின் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ்தான் பதிவு செய்யவேண்டும்.

இதனால் மனுதாரர்களின் திருமணம் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாததால், இவர்களின் திருமணம் செல்லாது தான். எனவே கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை நம் நாட்டைச் சேர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்வது தொடர்பான செய்திகள் அடிக்கடி ஊடகங்களில் பார்க்க முடிகிறது.

இந்த திருமணங்களில் இந்திய நாட்டின் திருமணச் சட்டங்களைத் தான் நாம் பின்பற்ற வேண்டும். இந்து திருமண சட்டத்தில் தம்பதி இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். வெளிநாட்டினரை திருமணம் செய்யும்போது, அவர்கள் இந்து மதத்தைச் சேராதவர்கள் என்றால் கண்டிப்பாக சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பதிவு செய்யவில்லை என்றால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது ஆகும்” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.