புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்த ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் (87) இன்று காலமானார். இவர், கடந்த 28 வருடங்களாக ரூ.100 ஊதியத்தில் ராமர் கோயிலில் பணியாற்றிவர்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்தவர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ். இவருக்கு நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பக்கவாதம் காரணமாக அயோத்தியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு மூளையில் திடீர் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், அவர் லக்னோவின் பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று காலை 8 மணியளவில் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தனது 87 வயதில் காலமானார். இவர் அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணியில் முக்கிய பங்காற்றிய, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தார். கடந்த டிசம்பர் 6, 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின், அங்குக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக ராமர் கோயிலுக்கு அர்ச்சகராக பணியாற்றினார். அப்போது முதல், ராமருக்கான பிரமாண்டமான கோயிலில் குழந்தை ராம் லாலாவின் பிரதிஷ்டை செய்யப்பட்டது வரை சத்யேந்திர தாஸ் சாட்சியாக இருந்தவர்.
இதற்காக, அவருக்கு மாதம் வெறும் ரூ.100 மட்டுமே ஊதியமாக அளிக்கப்பட்டு வந்தது. சுமார் 28 ஆண்டுகளாக ஒரே தொகையை ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் பெற்று வந்தார். இதன் பிறகுதான் அவருக்கு ஊதியம் உயர்த்திக் கொடுக்கப்பட்டது. பாபர் மசூதி, ராமர் கோயில் மீதான மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 19, 2018-இல் வெளியானது.
இதையடுத்து, உடனடியாக உருவான தற்காலிக கோயிலில் தலைமை அர்ச்சகராக சுமார் நான்கு ஆண்டுகள் ராம் லாலாவுக்குச் சேவை செய்தார். இதன் பிறகு, ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்தும், அவர் ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகராக தொடர்ந்தார். உ.பி.யின் பண்டிதர்களில் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் மிகவும் படித்தவராகக் கருதப்படுகிறார். 1975-ஆம் ஆண்டு, ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் சமஸ்கிருத வித்தியாலயாவில் பட்டம் பெற்றார். இதன் அடுத்த ஆண்டான1976-இல், அயோத்தியின் சமஸ்கிருத மகாவித்யாலயாவில் உதவி ஆசிரியராக அவர் பணியும் பெற்றார். 1992-இல், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் அவர் மார்ச் முதல் ராமர் கோயில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.
சத்யேந்திர தாஸின் மறைவுக்கு ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. அவரது மறைவு காரணமாக உ.பி.யின் புனித நகரமான அயோத்யாவின் மடாலயக் கோயில்களில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
ஆச்சர்யா சத்யேந்திர தாஸ் குறித்து பிஜிஐ மருத்துவமனை நிர்வாகம் சுகாதார அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், அவர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது. ராமர் கோயில் தலைமைப் பூசாரியான அவர், பிஜிஐ மருத்துவமனையிலிருந்த போது உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றிருந்தார். சத்யேந்திர தாஸின் உடல் இன்று அயோத்தி கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் பிப்ரவரி 13 இல் நடத்தப்பட உள்ளது. இது, அயோத்யாவிலுள்ள சரயு நதிக்கரையில் செய்யப்பட உள்ளது.