உதகை அரசு தாவரவியல் பூங்காவில் டாப்ஃபோடில் மலர்கள்!

உதகை: இந்த ஆண்டுக்கான கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் 127-வது மலர் கண்காட்சிகாக சிறப்பம்சமாக 2000 தொட்டிகளில் ‘டாப்ஃபோடில்’ மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இவை மலர் கண்காட்சியின் போது காட்சிப்படுத்தப்படும்.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் நடைபெற உள்ள 127-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட உள்ளன.முதற்கட்டமாக நீண்ட வாழ்நாட்களைக் கொண்ட சாலிவியா, டெல்பீனியம் மற்றும் பென்ஸ்டிமன் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளது.

இவ்வாண்டு சிறப்பு அம்சமாக சைக்லமன், சினரேரியா, ஜெரோனியம், கிளாக்ஸ்சீனியா, ரெனன்குளோஸ் பல புதிய ரக ஆர்னமெண்டல், ஓரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், டெல்பீனியம், பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி பெட்டுனியா, பிளாக்ஸ், பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், கேல், வொ்வினா, சன்பிளவா், சிலோசியா, ஆன்டிரைனம், வயோலர் போன்ற 230 வகையான விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜொ்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்டு மலர் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.

மலர் தொட்டிகளில் நடவுப்பணி: ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு உதகை தாவரவியல் பூங்கா நாற்றங்காலில் உற்பத்தி செய்யப்பட்ட ‘டாப்ஃபோடில்’ மலர்கள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இதற்காக 2000 தொட்டிகளில் ‘டாப்ஃபோடில்’ மலர் நாற்றுகள், நடவு செய்யப்பட்டுள்ளன. இவை தற்போது பூக்கும் தருவாயில் உள்ளன. சில தொட்டிகளில் மலர்கள் மலர்ந்துள்ளன. மஞ்சள் நிற மலர்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளன. இந்த மலர் தொட்டிகள் மலர் கண்காட்சியின் போது சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்படும் என பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதைத்தவிர, இவ்வாண்டு மலர் காட்சி அரங்கினுள் 15000 பல வண்ண மலர் செடிகள் அடுக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர் மாடத்தில் அலங்கரிப்பதற்காக 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொட்டிகளில் மண் நிரம்பி, உரமிட்டு, செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. பூங்கா ஊழியர்கள் கூறியதாவது: கோடை சீசன் காலத்தில் மலர்கள் மலரும் வகையில், மலர்ச்செடிகள் தொட்டிகளில் பல கட்டங்களாக நடவு செய்யப்பட்டு வருகிறது. தாமதமாக பூக்கும் மலர்ச்செடிகள் முதலிலும், விரைவாக பூக்கும் மலர்ச்செடிகள் கடைசியிலும் நடவு செய்யப்படும் என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.