MS Dhoni: “தோனியின் கண்களை பார்த்தால்…" -முன்னாள் வீரர் தவான் பகிரும் சுவாரஸ்யம்

இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் – சேவாக் ஓப்பனிங் கூட்டணிக்குப் பிறகு, வெற்றிகரமான ஓப்பனிங் கூட்டணியாக அமைந்தது ரோஹித் – ஷிகர் தவான் கூட்டணிதான். இதில், 2013-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டி மூலம் டெஸ்டில் அறிமுகமான தவான், தனது அறிமுகப் போட்டியிலேயே முதல் இன்னிங்ஸில் அதிரடியாக 187 ரன்கள் அடித்து கவனம் ஈர்த்தார். அதே ஆண்டில், சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியில் இடம்பிடித்து 5 ஆட்டங்களில் 363 ரன்கள் அடித்து, இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியதோடு தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

2013-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி

அதன்பின்னர், இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஓப்பனிங் பேட்ஸ்மேனாக உருவெடுத்த தவான், டெஸ்டில் 2,315 ரன்கள், ஒருநாள் போட்டியில் 6,793 ரன்கள், டி20-யில் 1,759 ரன்கள் அடித்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். தற்போது, அடுத்த வாரம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அம்பாசிடராக ஐ.சி.சி-யால் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருடன், 2017-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ்கான், ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், சமீபத்தில் ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து வீரர் டிம் சவுதி ஆகியோரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது அணியின் கேப்டனாக இருந்த தோனியைப் பற்றி தவான் பேசியிருக்கிறார். தனியார் ஊடக நேர்காணலில் பேசிய தவான், “தோனி மிகவும் நிதானமாக இருப்பார். போட்டிக்குப் பிறகு அதிகம் பேசமாட்டார். தோனியின் இருப்பே மிக பலமாக இருக்கும். நான் அவரின் தலைமையின்கீழ் விளையாடியபோது அனுபவம் வாய்ந்த கேப்டனாக ஏற்கெனவே அவர் மாறிவிட்டார், நிறைய சாதித்துவிட்டார்.

தவான்

ஒரு அணி எப்படி செயல்படுகிறது, வீரர் எப்படி தயாராக இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். தோனி ஒருபோதும் சத்தம்போட்டு நான் பார்த்ததில்லை. அதுதான் அவருடைய பலம். அதைத்தான் களத்துக்கும் கொண்டுவருகிறார். ஆனால், அவரின் கண்களைப் பார்க்கும்போது நீங்கள் பயப்படுவீர்கள்.” என்று கூறினார்.

கோலி – தோனி

மேலும், விராட் கோலி குறித்து பேசுகையில், “விராட் வித்தியாசமான ஆற்றல் கொண்டவர். ஃபிட்னஸ் கலாசாரத்தையே வெகுவாக மாற்றிவிட்டார். அதேசமயம், கேப்டனாகவும் முதிர்ச்சி அடைந்து கொண்டே இருந்தார்.” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.