உத்தரபிரதேசத்தை போலவே கர்நாடகாவில் நடைபெறும் கும்பமேளாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் நீராடினர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா திருவிழா களைகட்டியுள்ளது. இதேபோல் கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள டி.நரசிப்புராவில் காவிரி, கபிலா, ஸ்படிகா ஆகிய மூன்று நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நேற்று முன்தினம் 13-வது கும்பமேளா தொடங்கியது.
தென்னிந்தியாவின் பிரயாக்ராஜ் என அழைக்கப்படும் இந்த கும்பமேளா பிப்ரவரி 12ம் தேதிவரை (இன்று) 3 நாட்கள் நடைபெறுகிறது. கர்நாடக அரசின் சார்பில் இந்த கும்ப மேளாவுக்கு ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கும்பமேளா திருவிழாவின் முதல் நாளில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். இரண்டாம் நாளான நேற்று காலை 9 மணிக்கு நடுஹோலெ பசப்பா கோயிலில் பூஜை செய்து, பக்தர்கள் நீராடினர். மூன்றாம் நாளில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரும் பங்கேற்று நீராட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.