இந்தியா, பிரான்ஸ் இணைந்து ஏஐ ஆராய்ச்சி: பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் சந்திப்பில் முடிவு

பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் மெக்ரானும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில் ஏஐ ஆராய்ச்சியில் இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 10-ம் தேதி பாரிஸ் சென்றார். நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது நாள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். இந்த மாநாட்டை தொடர்ந்து, அன்று இரவு பாரிஸில் இருந்து துறைமுக நகரான மார்சேவுக்கு சென்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானும் மார்சே நகரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க மஸார்க்யூஸ் நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்தினார். முதல் மற்றும் 2-ம் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் உடல்கள் அங்குதான் அடக்கம் செய்யப்பட்டன.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவின் சுதந்திர வேட்கையில் இந்த நகரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இங்குதான் மாவீரர் சாவர்க்கர் தைரியமாக தப்பிக்க முயன்றார். அவரை பிரிட்டிஷ் காவலில் ஒப்படைக்கக் கூடாது என கோரிக்கை வைத்த மார்சே மக்களுக்கு நன்றி. வீர சாவர்க்கரின் துணிச்சல் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து மார்சே நகரில் நிறுவப்பட்டுள்ள உள்ள இந்திய துணைத் தூதரகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

பின்னர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரானும் பிரதமர் நரேந்திர மோடியும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பின்னர் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கையெழுத்தானது. இதன்படி ஏஐ ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.

இந்தியா-பிரான்ஸ் 2026-ம் ஆண்டு கண்டுபிடிப்புக்கான இலச்சினை வெளியிடப்பட்டது. இது கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.

பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்பட்டன. மேலும் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் உள்ள கூட்டுறவை மேம்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அணுசக்தி துறையில் இரு நாடுகளுக்கிடையே உள்ள ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கிடையிலான அணுசக்தி கூட்டுறவை மேலும் பலப்படுத்தும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் (யுஎன்எஸ்சி) சீர்திருத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். குறிப்பாக, யுஎன்எஸ்சி-யில் இந்தியாவை நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்க பிரான்ஸ் ஆதரவு அளிக்கும் என மெக்ரான் மீண்டும் உறுதி அளித்தார். இதுதவிர இந்தோ-பசிபிக் உட்பட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளில் இணைந்து செயல்பட இருவரும் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா புறப்பட்டார் மோடி: பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக நேற்று மாலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது 2-வது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசுகிறார். உலக நாடுகள் மீதான வரி விதிப்பை ட்ரம்ப் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அருகே உள்ள, அதிபர் மாளிகை விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுஸில் பிரதமர் மோடி தங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.