சென்னை: வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட நிலங்களின் உண்மை நிலை அறியாமல் அதை வாங்கி குடியிருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த நிலத்தை விடுவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்துள்ளதாகவும், இக்குழு அளிக்கும் பரிந்துரையின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் சு.முத்துசாமி நேற்று கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன் இடங்கள் எடுக்கப்பட்டு, ஆரம்பகட்ட பணியாக அதற்கான நோட்டீஸ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் எந்த நடவடிக்கையும் அதில் எடுக்கப்படவில்லை. இதுகுறித்த மனுக்கள் வந்தபோது, மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை சரிசெய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
எனவே, இந்த மாதிரியான பிரச்சினை உள்ள இடங்களை கண்டறிய வாரியத்தின் சார்பில் 16 இடங்களில் புகார் பெட்டிகளை வைத்து கோரிக்கைகள் பெறப்பட்டன. இதன்மீது வாரியமே இதில் நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக இருக்காது என்பதால், கமிட்டி அமைத்து பரிந்துரை பெற முடிவெடுக்கப்பட்டது. இதுவரை நோட்டீஸ் கொடுத்து வீட்டுவசதி வாரியம் எடுத்துள்ள நிலங்கள் 5 வகையாக பிரிக்கப்பட்டன.
ஐந்து வகைகளில், முதல் இரண்டில் வாரியம் நோட்டீஸ் அளித்துள்ளதுடன், எந்த பணமும் கொடுக்காத அளவில் நிற்கிறது. அதில் நிலத்தை திருப்பிக் கொடுப்பதில் பிரச்சினை இல்லை என்பதால், நீதிமன்ற வழக்குகள் உள்ள இடத்தை ஒதுக்கிவிட்டு 1,500 ஏக்கர் அளவுக்கு உத்தரவு முதல்வரால் வழங்கப்பட்டது.
அதன்பின் தற்போது 1,800 ஏக்கர் நிலத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. 3 மற்றும் 4-ம் வகை நிலங்களை பொறுத்தவரை, வீட்டுவசதி வாரியம்அந்த நிலத்துக்கான தொகையை சில உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ளது.. பெறாதவர்களுக்கு நீதிமன்றத்திலும், வருவாய்த்துறையிலும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும், 40 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காததால், உண்மை நிலையை கூறாமல் அந்த இடங்களை உரிமையாளர்கள் பலருக்கு விற்றுள்ளனர். இதில் பிரச்சினை இருக்கிறது என்பதே தெரியாமல் அவர்கள் வாங்கியுள்ளனர். அவர்களுக்கும் பாதிப்பின்றி நிலத்தை விடுவிக்க 2 ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகளை தொடங்கியுள்ளனர்.
ஏப்ரல் இறுதிக்குள் பரிந்துரைகள் பெறப்பட்டு அதன்பின், நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்தாவது வகையை பொறுத்தவரை, வீட்டுவசதி வாரியம் முழுமையாக நிலத்தை எடுத்து, அதில் ஒரு பகுதியை மேம்பாடு செய்துள்ள நிலையில் மீதமுள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமித்தவர்களிடம் இடத்தை கோருவோம்.
அதில் அவர்கள் கட்டிடம் கட்டியிருக்கும் பட்சத்தில், இன்றைய தேதியில் வாரியம் விற்பதாக இருந்தால் என்ன தொகை அந்த இடத்துக்கு நிர்ணயிக்கப்படுமோ, அந்த தொகையை செலுத்தி எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதால் எந்த சலுகையும் கிடையாது. வீட்டுவசதி வாரிய இடங்களில் தளப்பரப்பு குறியீடு தொடர்பாக சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.