விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன்,

விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய நாசா விண்வெளி வீரர்களான சுனிதாவில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5, 2024 அன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக சென்றனர். ஆனால், இருவரும் எட்டு மாதங்களாக விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கு காரணம் அவர் சென்ற ராக்கெட்தான். போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் இவர் சென்றார். இவருடன் அமெரிக்க விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் பயணித்தார். இருவரும் 10 நாட்களில் பூமிக்கு திரும்புவதுதான் திட்டம். ஆனால், திட்டத்தின்படி எதுவும் நடக்கவில்லை. குறிப்பாக அவர்களால் 10 நாட்களில் பூமிக்கு திரும்ப முடியவில்லை.

காரணம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுதுதான் என கூறப்பட்டது. ராக்கெட் பூமியில் பத்திரமாக தரையிறங்க த்ரஸ்டர் எனப்படும் அமைப்பு பயன்படும். இந்த ராக்கெட்டில் த்ரஸ்டரில்தான் பிரச்சினை ஏற்பட்டது. இதன்காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. பலரும் சுனிதாவையும், வில்மோரையும் பத்திரமாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினர். இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. நான் ஜனாதிபதியானால் சுனிதா வில்லியம்ஸ்சை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டுவருவேன் என டிரம்ப் கூறியிருந்தார்.

அதேபோல, ஜனாதிபதியான பின்னர் சுனிதா வில்லியம்ஸை உடனடியாக மீட்க எலான் மஸ்க்குக்கு டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மீட்பு பணிகள் வேகமடைந்தன. இது குறித்து நாசா கூறுகையில், வரும் மார்ச் 12ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ-10 ராக்கெட் விண்வெளிக்கு செல்ல உள்ளது. அது, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை மீட்டு கொண்டு வரும் என்று கூறியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.