புதிய வருமான வரி மசோதா இன்று தாக்கலாகிறது

புதுடெல்லி: எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட உள்ளது.

2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் பிப்.1-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில், இன்று இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. “வருமான வரி மசோதா 2025” என்று அழைக்கப்படும் இந்த புதிய மசோதா 2026 ஏப்.1 முதல் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வருமான வரி மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் ஆகியவற்றை கொண்டுள்ளதாக இருக்கும். மதிப்பீட்டு ஆண்டு என்பது வரி ஆண்டு எனவும், முந்தைய ஆண்டு என்பது நிதி ஆண்டு என்றும் மாற்றப்பட்டுள்ளது. வரி ஆண்டு என்பது ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து தொடங்கும் 12 மாதங்களை குறிப்பதாகும். அதன்படி இது, நிதியாண்டின் கட்டமைப்போடு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 2024-25 நிதியாண்டில் சம்பாதித்த வருமானம் அடுத்த நிதியாண்டில் மதிப்பிடப்படுகிறது. இந்த புதிய வரிமுறையில் 2025-26 மதிப்பீட்டு ஆண்டாக இருக்கும். மேலும், மத்திய நேரடி வரிகள் வாரியம், வரி நிர்வாக விதிகளை நிறுவவும், இணக்கமான நடவடிக்கைகளை செயல்படுத்தவும், டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகளை அடிக்கடி சட்ட மாற்றங்கள் தேவையின்றி செயல்படுத்தவும் இப்புதிய மசோதா அனுமதிக்கும். வருமான வரிச்சட்ட பிரிவு 234 எப்-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனிநபர் வருமான வரி தாக்கலை தாமதித்தால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.