உதாசீனப்படுத்தப்படும் திமுகவின் உண்மை தொண்டர்கள்! – அடிமட்டத்தில் அலையடிக்கும் அதிருப்திகள்

“பேரனுக்கு பேனர் வைக்கவும், போஸ்டர் ஒட்டும் நிலையும் வெகு தொலைவில் இல்லை. இதற்கு நாங்கள் தயாராய் இல்லை. எனவே, இனியும் என்னால் இந்த கட்சியில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” – அண்மையில் திமுக-வில் இருந்து விலகிய சேலம் மத்திய மாவட்ட ஒன்றிய பிரதிநிதி எழில் அரசன் விலகலுக்காக சொன்ன காரணம் இது.

இது உதாரணம் தான். தமிழகம் முழு​வதும் அனைத்து மாவட்​டங்​களி​லும் இதுபோல எழில் அரசன்கள் நூற்றுக் கணக்​கில், ஆயிரக் கணக்​கில் கட்சித் தலைமை தங்களை கண்டு​கொள்ள​வில்​லையே என்ற புலம்​பலிலும் தவிப்​பிலும் இருக்​கிறார்​கள். அதிலும் குறிப்​பாக, தங்கள் மாவட்​டத்து மந்திரி​கள், செயலா​ளர்கள் தங்களை உதாசீனப்​படுத்துவதை எடுத்​துச் சொல்லி பரிகாரம் தேடமுடி​யாமல் அவர்கள் தவித்​துக் கொண்​டிருக்​கிறார்​கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சேலம் மாவட்ட திமுக நிர்​வாகிகள் சிலர், “தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி​யில் இருந்த அதிமுக-​வில் கூட இத்தனை மனக்​கு​முறல்கள் இல்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த நான்கே ஆண்டு​களில் திமுக-​வின் அடிமட்டம் வரை அதிருப்தி அலை அடிக்​கிறது.

கட்சி​யின் முன்​னாள், இந்நாள் நிர்​வாகி​களுக்​குள் சரியான புரிதல் இல்லாத​தால் இடைவெளி அதிகரித்து​விட்​டது. அதிகாரத்​தில் இருப்​பவர்கள் அடிமட்டத் தொண்​டர்களை மதிப்​ப​தில்லை என்பது ஒருபுறமிருக்க, புதிதாக பொறுப்​புக்கு வந்தவர்கள் மூத்த நிர்​வாகிகளை ஏற்க மனமில்​லாமல் பெயரள​வில் ஒன்றாக இருப்பது போல் காட்​டிக் கொள்​கின்​றனர்.

மாவட்டச் செயலா​ளர்​கள், அமைச்​சர்​களாக இருப்​பவர்கள் தங்கள் குடும்பத்​தினருக்​கும், தங்களுக்கு நெருக்​க​மானவர்​களுக்​கும் மட்டுமே நல்லது செய்ய நினைக்​கிறார்​கள். மற்றவர்​களிடம் அவர்கள் முகம் கொடுத்​துப் பேசக்கூட மறுக்​கிறார்​கள். கட்சி அறிவிக்​கும் போராட்​டங்​கள், மாநாடு​களுக்கு ஆட்களைத் திரட்​ட​வும், தேர்தல் நேரத்​தில் எதிக்​கட்​சி​யினருடன் சண்டை போட்டு கட்சிக்கு ஓட்டு சேகரிக்​க​வும் மட்டும் தொண்டன் வேண்​டும்.

ஆனால், ஆட்சி​யின் பலன்கள் அவனுக்கு கிடைத்து​விடக் கூடாது என நினைப்பது எந்த விதத்​தில் நியா​யம்? இந்தக் கேள்​வியை உட்கட்​சிக் கூட்​டங்​களில் பலரும் இப்போது வெளிப்​படை​யாகவே எழுப்ப ஆரம்​பித்து​விட்​டார்​கள். எழில் அரசன் எழுப்பிய கேள்​வி​யும் அதுதான். இதே மனநிலை​யில் இருக்​கும் திமுக தொண்​டர்கள் பலரும் இந்தக் கட்சி​யில் வாய்​பில்லை என்றால் அடுத்த கட்சி என்ற மனநிலைக்கு இப்போது வந்து​விட்​டார்​கள்.

திமுக தொண்டன் அரசின் சலுகைகளைப் பெறவும், அவனுக்கு ஒரு பிரச்​சினை ஏற்பட்​டால் அதைத் தீர்த்து வைக்​க​வும் மாவட்ட நிர்​வாகி​களோ, அமைச்​சர்களோ தயாராய் இல்லை. மாறாக, கோரிக்கை மனுவுடன் செல்​லும் தொண்டனை அமைச்​சருக்கோ, மாவட்டச் செயலா​ள​ருக்கோ நெருக்​க​மானவர்​கள், உதவி​யாளர்கள் குறுக்கே இருந்து கொண்டு அவர்களை அண்ட விடுவதே இல்லை.

கட்சி தலைமை​யில் மட்டுமல்​லாது மாவட்ட அளவிலும் மாவட்டச் செயலா​ளர்​கள், அமைச்​சர்கள் இவர்​களின் குடும்பத்​தினர் தான் கட்சி​யிலும் அதிகாரத்​தி​லும் ஆதிக்கம் செலுத்து​கிறார்​கள். தற்போது உதயநி​திக்கு சிக்​கலில்​லாமல் இருப்​ப​தற்காக அவரது விசு​வாசி களுக்​கும் பதவிகள் அளிக்​கப்​பட்டு வருகின்றன.

போதாக்​குறைக்கு, மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்​களும் இங்கே வலுவான இடத்​தைப் பிடித்​துக் கொள்​கிறார்​கள். இதனால் இந்தக் கட்சிக்காக அடிப்​படையி​லிருந்து உழைத்த வேர்கள் உதாசீனப்​படுத்​தப்​பட்டுக் கிடக்​கின்றன.

இதுபோன்ற காரணங்​களால் தான் கட்சிக்​குள் இருக்​கும் அதிருப்​திகள் வெளிப்​படையாக வெடிக்கத் தொடங்​கி​யுள்​ளது. இனியும் எஜமான் தோரணை​யில் மாவட்டச் செயலா​ளர்​களும், அமைச்​சர்​களும் கட்சித் தலைமை​யும் இருப்​பார்​களே​யா​னால் அது திமுக-வுக்​குத்​தான் பேரிழப்பாக முடி​யும்.

அது நடக்​காமல் இருக்க வேண்​டு​மா​னால் கட்​சி​யின் வேர்​களான அடிமட்​டத் தொண்​டனின் குறை​களைக் ​காது​கொடுத்​துக் கேட்க வேண்​டும். அவர்களை உ​தாசீனம் செய்​பவர்களை கண்​டித்து களை​யெடுக்க வேண்​டும்” என்​றனர். செய்​யு​மா திமுக தலைமை?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.