கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், 2025-2026 ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முழு அளவிலான மாநில பட்ஜெட்டை நிதி மந்திரி (பொறுப்பு) சந்திரிமா பட்டாச்சார்யா தாக்கல் செய்து பேசினார்.
இந்த பட்ஜெட், சமூக நலம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிததல் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. ரூ.3.89 லட்சம் கோடி அளவிலான இந்த பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பல்வேறு துறைகளில் பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களை வளப்படுத்தும் திட்டத்திற்காக, அரசின் உள்ளார்ந்த ஈடுபாட்டை சுட்டி காட்டும் வகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நல துறைக்கு, ரூ.38,762 கோடி என பெரிய தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. விளிம்பு நிலை சமூகத்தினருக்கு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவை உறுதி செய்யும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலனுக்கான துறைக்கு ரூ.2,423.80 கோடி ஒதுக்கப்பட்டது.
இதேபோன்று, பள்ளி மற்றும் கல்வி துறைக்கு ரூ.41,153.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நலன் துறை, ரூ.21,355 கோடியை நிதி ஒதுக்கீடாக பெற்றது. பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.44,139 கோடி, வேளாண் துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.