ஹெய்ன்றிச் ஹெர்ட்ஸ், நிகோலா டெஸ்லா, ஏர்னஸ்ட் அலெக்சாண்டர்சன், ஜெகதீச சந்திர போஸ், மார்கோனி போன்ற பலரும் கம்பியில்லாத் தகவல் தொடர்பு முறையை உருவாக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர். 50 ஆண்டுகள் முயற்சிக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஜெகதீச சந்திர போஸ் கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பை உருவாக்கினார். ஆனால், அறிவியல் உலகம் அவரைக் கண்டு கொள்ளவில்லை.
அவருக்குப் பின்னரே மார்கோனி கம்பியில்லாமல் ஆண்டெனா மூலம் ஒன்றரை கி.மீ. தொலைவுக்குச் சமிக்ஞை அனுப்பு வதில் வெற்றி பெற்றார். அவர் மேலும் முயற்சி செய்ததில் 2.5 கி.மீக்குச்சமிக்ஞை கிடைத்தது. ஆண்டெனா வின் உயரத்தை அதிகரித்துக் கொண்டே செல்ல, அந்த அளவுக்குச் சமிக்ஞைகள் தெளிவாகக் கிடைத்தன.
இத்தாலியில் மார்க்கோனிக்கு அங்கீகாரம் கிடைக்காததால், இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு 6 கி.மீ. தொலைவு வரை தகவலை அனுப்பிக் காட்டினார். இங்கிலாந்து அரசு அவரின் கண்டறிதலை அங்கீகரித்தது.
![](https://static.hindutamil.in/hindu/uploads/common/2025/02/13/17394262592006.jpg)
காப்புரிமையும் பெற்றார் மார்கோனி. ரேடியோ அலைகள் நேர்க் கோட்டில் தான் பரவும். உலகம் உருண்டை என்பதால் 200 மைலுக்கு மேல் தகவலைக் கடத்த முடியாது என்று நினைத்திருந்தார்கள். ஆனால், அதைத்தனது தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் மார்கோனி முறியடித்தார்.
3500 கி.மீ என்கிற உச்சபட்ச அளவுக்குத் தகவலைக் கடத்திக் காட்டினார். பூமியின் வளைவால் கம்பியில்லா அலைகள் பாதிக்கப்படவில்லை என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்தினார். 1909ஆம் ஆண்டு மார்கோனிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு, கார்ல் பெர்டினாண்ட் பிரெளன் என்பவரோடு பகிர்ந்து அளிக்கப்பட்டது. ‘நீண்ட தொலைவு ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை’ என மார்கோனி அழைக்கப்படுகிறார்.
பிப்.13 – இன்று – உலக வானொலி நாள்