மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆர்ச்சை இடிக்கும்போது தூண் விழுந்து ஜேசிபி வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.
மதுரை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் தோரணவாயில்களை இடிக்க சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி நேற்று இரவு போக்குவரத்து குறைந்த நிலையில் 10 மணிக்கு மேல் மாட்டுத்தாவணி அருகிலுள்ள நக்கீரர் தோரணவாயிலை இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது ஜேசிபி இயந்திரம் மீது இடிந்த தூண் விழுந்ததில் திருமங்கலத்தைச் சேர்ந்த ஜேசிபி ஓட்டுநர் உயிரிழந்தார். ஒப்பந்ததாரர் நல்லதம்பியும் காயம் அடைந்தார். முறையான முன்னெச்சரிக்கையும், திட்டமிடலும் இன்றி ஆர்ச் இடிக்கப்பட்டதில் நாகலிங்கம் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மாட்டுத்தாவணி பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸார் அவர்களிடம் சமரசம் செய்து பிறகு உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து மாட்டுத்தாவணி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.