சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராக ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் பணியாற்றி வந்தார். இவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் என டி.ஜி.பி அலுவலகத்தில் விசாரித்தோம்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய டி.ஜி.பி அலுவலக உயரதிகாரிகள் சிலர், “கடந்த 1999-ம் ஆண்டு குரூப் ஒன் தேர்வு மூலம் டி.எஸ்.பியாக பணிக்குச் சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரின் சொந்த ஊர் தென்காசி. டி.எஸ்.பி பயிற்சி முடிந்த பிறகு இவர் பவானிஉள்ளிட்ட இடங்களில் டி.எஸ்.பியாக பணியாற்றினார். அதன்பிறகு எஸ்.பி பதவி உயர்வு பெற்று கிருஷ்ணகிரி, நெல்லை. சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றினார். சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றிய இவர், சென்னை போக்குவரத்து துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் டி.ஐ.ஜியாக பதவிஉயர்வு பெற்று தற்போது சென்னை போக்குவரத்து பிரிவின் இணை கமிஷனராக பணியாற்றி வந்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/___________________1.jpg)
இந்தநிலையில், இணை கமிஷனர் மகேஷ்குமார் மீது டி.ஜி.பி அலுவலகத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் மகேஷ்குமார், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர் கொடுத்த புகாரில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததால் விசாகா கமிட்டிக்கு அந்தப் புகார் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர்.
இணை கமிஷனர் மகேஷ்குமார் தரப்பில் பேசியவர்கள், “டிப்பார்ட்மெண்டில் எந்தவித குற்றச்சாட்டுக்களிலும் சிக்காத மகேஷ்குமார் மீது வேண்டுமென்ற இந்தப் புகாரளிக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம். புகார் கொடுத்த பெண் காவலர் தரப்பு இந்த விவகாரத்தை ஏன் பெரிதுப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களின் கேள்வி. விசாகா கமிட்டி விசாரணையில்தான் யார் மீது தவறு இருப்பது தெரியவரும். அதற்குள் மகேஷ்குமார் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை ஒரு தரப்பினர் பரப்பி வருகிறார்கள்” என்றனர்.